சிறுணியம் பலராமனை கைத்தாங்கலாக தூக்கிய முன்னாள் அமைச்சர்; எடப்பாடியின் செயலால் தொண்டர்கள் அதிருப்தி!
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரப் பயணத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவருக்கு மிக அருகிலேயே நின்றிருந்த மாவட்டச் செயலாளர் திடீரென மயங்கி விழுந்தும், அதனைப் பொருட்படுத்தாமல் இபிஎஸ் தனது உரையைத் தொடர்ந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரப்புரை வாகனமான பேருந்தின் மேல் தளத்தில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு வலதுபுறத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமனும், இடதுபுறத்தில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமாரும் நின்றிருந்தனர். வெயில் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சிறுணியம் பலராமன் திடீரென நிலைகுலைந்து எடப்பாடியின் தோள் அருகிலேயே மயங்கிச் சரிந்தார். ஆனால், தனக்கு மிக அருகிலேயே மாவட்டச் செயலாளர் மயங்கி விழுவதைக் கவனித்த பிறகும், எடப்பாடி பழனிசாமி தனது பேச்சை ஒரு நொடி கூட நிறுத்தாமல் மைக் பிடித்துத் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
மயங்கி கீழே அமர்ந்த மாவட்டச் செயலாளரை, அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் நிர்வாகிகள் கைத்தாங்கலாகத் தூக்கிப் பேருந்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிறிது நேரம் ஓய்வெடுத்த சிறுணியம் பலராமன், பின்னர் எடப்பாடி உரையை முடிக்கும்போது மீண்டும் வெளியே வந்து அவருக்கு வீரவாள் பரிசளித்து சால்வை அணிவித்தார். இருப்பினும், உயிர்நாடியான மாவட்டச் செயலாளர் ஒருவர் கண்முன்னே மயங்கி விழுந்தும், மனிதாபிமான அடிப்படையில் பேச்சை நிறுத்தாமல் எடப்பாடி பழனிசாமி ‘ரோபோ’ போலத் தொடர்ந்து பேசியது அங்கிருந்த நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. "தலைவருக்குப் பேச்சு தான் முக்கியமா, தொண்டன் முக்கியமில்லையா?" என ரத்தத்தின் ரத்தங்கள் ரகசியமாகப் புலம்பி வருகின்றனர்.
