மென்பொறியாளர் டு கஞ்சா கடத்தல் லேடி டான்! பெங்களூரு ஐடி பெண் ரேனுகா அதிரடி கைது!
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர், ஆந்திராவில் போதைப்பொருள் கடத்தலில் ‘லேடி டான்’ ஆக உருவெடுத்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஐடி வேலை என்பது வெறும் வெளிவேஷம் மட்டுமே என்றும், பின்னணியில் அவர் சர்வதேச அளவில் கஞ்சா கடத்தல் நெட்வொர்க்கை இயக்கி வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான காதே ரேனுகா, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கைநிறையச் சம்பளம் வாங்கும் டெக்கியாக வலம் வந்த ரேனுகா, குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆகத் திட்டமிட்டுத் தனது நண்பர் சூர்யா காளிதாஸ் என்பவருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல் களத்தில் இறங்கியுள்ளார். இதற்காக ஆந்திராவின் நர்சிப்பட்டினம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தனது ரகசியத் தலைமைச் செயலகமாக மாற்றியுள்ளார்.
ஒடிசா மாநிலப் பழங்குடியின மக்களிடமிருந்து வெறும் 5,000 ரூபாய்க்கு மிக வீரியமான ‘ஷீலாவதி’ ரகக் கஞ்சாவைக் கொள்முதல் செய்து, அதைத் தமிழகம் மற்றும் பெங்களூருவிற்கு பல மடங்கு விலைக்கு விற்று வந்துள்ளார். இதற்காகத் தனியாகக் கார் ஓட்டுநர்கள் மற்றும் ஏஜெண்டுகளை வேலைக்கு அமர்த்திப் பெரும் நெட்வொர்க்கையே இயக்கியுள்ளார். ஆந்திராவில் இருந்து கடத்தப்படும் கஞ்சாவைத் தமிழகம் வழியாக இலங்கைக்குக் கொண்டு செல்வதே இவர்களின் பிரதான ஸ்கெட்ச் ஆக இருந்துள்ளது. ‘லேடி டான்’ ரேனுகாவின் இந்த நிழல் உலகக் கனவு தற்போது போலீசாரின் அதிரடி வேட்டையால் கலைந்துள்ளது.
அனகாபள்ளி மாவட்ட போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், நர்சிப்பட்டினம் அருகே பதுங்கியிருந்த தனிப்படை போலீசார் ரேனுகா மற்றும் அவரது கூட்டாளிகளின் காரை சுற்றி வளைத்தனர். அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 74 கிலோ உயர் ரகக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரேனுகா உட்பட மொத்தம் 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர். ஒரு மென்பொறியாளர் இப்படி சர்வதேசக் கஞ்சா கடத்தலில் மூளையாகச் செயல்பட்ட சம்பவம் ஐடி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)