அரசாணை 149-ஐ ரத்து செய்யக் கோரி 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்! தை 1-க்குள் தீர்வு கிடைக்காவிடில் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!
2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உடனடியாகப் பணி வழங்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று 100-வது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான தகுதித் தேர்வில் (TET) கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி நியமனத்திற்காகக் காத்திருக்கின்றனர். தங்களுக்கு உடனடியாகப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வரும் இவர்கள், இன்று திருச்சியில் தங்களின் 100-வது போராட்டத்தைப் பதிவு செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முக்கியமாக இரண்டு கோரிக்கைகளைத் தமிழக அரசுக்கு முன்வைத்தனர். முதலாவதாக, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்குவதைத் தடுக்கும் முந்தைய அரசின் அரசாணை 149-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இரண்டாவதாக, “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்குப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிற திமுக-வின் தேர்தல் வாக்குறுதி 177-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து விண்ணதிரும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
போராட்டத்தின் போது பேசிய சங்க நிர்வாகிகள், “திமுக ஆட்சி அமைய நாங்கள் முக்கியக் காரணமாக இருந்தோம். தேர்தல் நேரத்தில் எங்களுக்குப் பணி வழங்கப்படும் என உறுதியளித்துவிட்டு, இப்போது எங்களைப் புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது. இன்றுடன் நாங்கள் 100 போராட்டங்களை நடத்திவிட்டோம். இதுதான் எங்களுடைய கடைசிப் போராட்டமாக இருக்க வேண்டும். வரும் தை மாதம் ஒன்றாம் தேதிக்குள் (பொங்கல்) எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையென்றால், வரவிருக்கும் தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம்” என எச்சரிக்கை விடுத்தனர். இந்தத் தொடர் போராட்டத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
.jpg)