நள்ளிரவு 1 மணி வரை சரக்கு விற்பனை செய்ய ரூ.30,000 வரை கட்டணம்! சுற்றுலா பயணிகளுக்காகத் தளர்வு!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் கூடுதல் நேரம் மது விற்பனை செய்யக் கலால்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக மதுபான நிலையங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்ட தொகையைச் செலுத்திக் கூடுதல் நேர அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலமான புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில், நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்யக் கட்டணங்களுடன் கூடிய இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் கூடுதல் நேரம் மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரெஞ்சு கலாச்சாரம் மற்றும் அழகிய கடற்கரைகளைக் கொண்ட புதுச்சேரியில் நாளை 2026 புத்தாண்டை வரவேற்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையையும், கொண்டாட்டங்களையும் கருத்தில் கொண்டு, வழக்கமான நேரத்தைத் தாண்டி கூடுதல் நேரம் மது விற்பனை செய்யக் கலால்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக மதுபான விற்பனை நிலையங்களின் வகைகளுக்கு ஏற்பத் தனித்தனி கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, எப்எல்-1 மற்றும் எப்எல்-2 வகை பார் வசதி இல்லாத சில்லறை விற்பனை நிலையங்கள், நாளை இரவு 11 மணி முதல் 11.30 மணி வரை கூடுதலாக 30 நிமிடங்கள் மது விற்பனை செய்ய ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும். பாருடன் கூடிய எப்எல்-2 சில்லறை விற்பனை நிலையங்கள் இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மது விநியோகம் செய்ய ரூ.20,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சுற்றுலா மது விற்பனைப் பிரிவின் கீழ் வருபவர்கள் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை மது விற்க ரூ.10,000 செலுத்த வேண்டும்.
குறிப்பாக, ஹோட்டல்கள் மற்றும் மைதானங்களில் நடத்தப்படும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளில் இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்ய ரூ.30,000 கட்டணம் செலுத்திக் கலால்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெறாமல் விதிகளை மீறி மது விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் பார்கள் மீது சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மதுப்பிரியர்களின் கொண்டாட்டத்திற்காகக் கலால்துறை எடுத்துள்ள இந்த முடிவு வியாபாரிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
