ரத்தினங்கள் இழைத்த அபய ஹஸ்தம், சூரிய பதக்கங்களுடன் சேவை! டிசம்பர் 30-ல் சொர்க்கவாசல் திறப்பு!
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவம் எட்டாம் நாளை எட்டியுள்ளது.
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கடந்த 19-ஆம் தேதி திருநெடுந்தாண்டவத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் 8-ஆம் நாளான இன்று, நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ‘ரத்தின பாண்டியன் கொண்டை’ அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
இன்றைய அலங்காரத்தில், நம்பெருமாள் பாண்டியன் கொண்டை சாற்றி, அதில் சிறிய நெற்றிச் சுட்டித் தொங்கல்கள் அசைய, சிகப்புக் கல் பதித்த அபய ஹஸ்தம் மற்றும் கண்டாபரணம் அணிந்து கம்பீரமாகக் காட்சி அளித்தார். திருமார்பில் ஒளிவீசும் சிகப்புக் கல் சூர்ய பதக்கமும், இருபுறமும் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் அழகிய மணவாளன் பதக்கங்களும் சாற்றப்பட்டிருந்தன. மேலும், சிகப்புக் கல் மகர கண்டிகைகள், அடுக்கு பதக்கங்கள், காசு மாலை மற்றும் இரண்டு வட முத்து மாலைகள் அணிந்து, மாந்துளிர் வண்ணப் பட்டுடுத்தி பக்தர்களை வசீகரித்தார். பின் சேவையாகக் கண்ட பேரண்ட பக்ஷி, புஜ கீர்த்தி மற்றும் தாயத்து சரங்கள் அணிந்து நம்பெருமாள் அருள்பாலித்து வருகிறார்.
மார்கழி மாதத்தின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளைத் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்வான பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பு வரும் டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலையில் நடைபெற உள்ளது. இதற்கான விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன.
.jpg)
.jpg)
.jpg)