திருவள்ளூர், கோவையில் 'டாப்' லிஸ்ட்; SIR படிவக் குளறுபடியால் 2026 தேர்தல் களம் இப்போதே பரபரப்பு!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்று வரும் 'சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி' (SIR) ஒரு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. வாக்காளர் பட்டியலில் விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யாத மற்றும் ஆவணக் குளறுபடிகள் கொண்ட 12.43 லட்சம் வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் முகவரி மாறியவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு கொண்டவர்கள் என மொத்தம் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மெகா நீக்கத்தைத் தொடர்ந்து, தற்போது வீடு வீடாகச் சேகரிக்கப்பட்ட 'SIR' கணக்கெடுப்பு படிவங்களில் முழுமையான விவரங்களை அளிக்காதது மற்றும் ஆவணச் சரிபார்ப்புத் தேவைகளுக்காக 12.43 லட்சம் பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களின்படி, அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 1.85 லட்சம் பேருக்கும், கோவை மாவட்டத்தில் 1.10 லட்சம் பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நோட்டீஸ் பெற்றுள்ள வாக்காளர்கள், தங்களது விவரங்களைச் சரிசெய்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பிப்ரவரி 7, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களது பெயர் விடுபடாமல் இருக்க படிவம் 6 அல்லது 8-ஐப் பயன்படுத்தித் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
