பாமக புனிதமடைந்துவிட்டது! மதுக்கடைகளை மூடக் கோரிப் பொதுநல வழக்கு தொடரப் போவதாக அறிவிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டதன் மூலம் கட்சி தூய்மை அடைந்துள்ளதாகவும், தொண்டர்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறியுள்ளதாகவும் பாமக சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பாலு, அக்கட்சியிலிருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டது குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், "கட்சி விரோதச் செயல்பாடுகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஜி.கே.மணியைப் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி தற்போதுதான் புனிதமடைந்துள்ளது. இது கட்சித் தொண்டர்களின் நீண்ட நாள் விருப்பமாகும்" எனத் தெரிவித்தார்.
மேலும் ஜி.கே.மணி மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த அவர், "திமுக தலைமை கொடுத்த வேலையை ஜி.கே.மணி மிகச் சரியாகச் செய்து முடித்துள்ளார். மறைமுகமாகத் திமுக-விற்கு ஆதரவாகச் செயல்பட்டதன் மூலம் அவர் தற்போது பலன்களைப் பெற்றுள்ளார். கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குப் பாமக-வில் இடமில்லை என்பது இந்த நீக்கத்தின் மூலம் உறுதியாகியுள்ளது" என்றார். தமிழக அரசின் மதுக் கொள்கை குறித்துப் பேசிய வழக்கறிஞர் பாலு, "தமிழகம் முழுவதும் 'மணமகிழ் மன்றம்' என்ற பெயரில் புதிய மதுக்கடைகளைத் தமிழக அரசு திறந்து வருவது கண்டிக்கத்தக்கது. இவற்றை உடனடியாக மூட வலியுறுத்திப் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விரைவில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பாமக வலுவான ஒரு கூட்டணியை அமைக்கும் என்றும், மருத்துவர் ஐயா மற்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் தலைமையில் கட்சி ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். ஜி.கே.மணியின் நீக்கம் பென்னாகரம் உள்ளிட்ட வட மாவட்டப் பாமக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கறிஞர் பாலுவின் இந்தப் பேச்சு பாமகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
