தாய்மை எனும் புனிதக் கடமையைத் தவறினால் சமூகம் வீழ்ந்துவிடும்! போக்சோ வழக்கில் மேல்முறையீடு தள்ளுபடி!
தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்துடனும் பாதுகாப்புடனும் வளர்க்க வேண்டிய புனிதமான பொறுப்பை ஒரு தாய் கைவிட்டுவிட்டால், அது ஒட்டுமொத்த குடும்பம் மற்றும் சமூகத்தின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் மிகக் கடுமையான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது.
தனது 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காதலனுக்குத் உடந்தையாக இருந்த தாய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள், குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து, 14 வயதான மகளுடன் வசித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் அந்தப் பெண்ணிற்குத் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு, சுப்புராஜ் அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்துச் சிறுமி தனது தாயிடம் கதறியபோது, "வெளியில் சொன்னால் நான் தற்கொலை செய்து கொள்வேன்" என அந்தத் தாயே சிறுமியை மிரட்டி, உண்மையை மறைக்க முயன்றுள்ளார்.
தொடர்ந்து பாலியல் தொல்லைகள் நீடித்ததால், ஒருகட்டத்தில் தாயைப் பிரிந்து தந்தையிடம் தஞ்சம் புகுந்த சிறுமி, நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். இதன் அடிப்படையில் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தாய் மற்றும் அவரது காதலர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம், கடந்த 2020-ஆம் ஆண்டில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, "காவல்துறை இந்தக் குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது; சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட எந்தக் காரணமும் இல்லை" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும் தங்களது தீர்ப்பில், "நமது கலாச்சாரத்தில் தந்தை, ஆசிரியர், தெய்வம் ஆகியோருக்கு மேலாகத் தாய் முதலிடத்தில் வைக்கப்படுகிறார். அத்தகைய உன்னதமான இடத்தில் இருக்கும் தாய், குழந்தைகளைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறினால் சமூகம் வீழ்ந்துவிடும்" என நீதிபதிகள் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர். பெற்ற மகளுக்கே ஒரு தாய் செய்த இந்தத் துரோகம் சட்டத்தின் முன் மன்னிக்க முடியாதது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
