2027 வரை மோட்டார் வாகன வரி கிடையாது – சுற்றுச்சூழல் காக்க தமிழக அரசின் அதிரடி அரசாணை!
தமிழகத்தில் மின்சார வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டைப் புரட்சிகரமான நிலைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், மாநில அரசு இன்று ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான 100 சதவீத மோட்டார் வாகன வரி தள்ளுபடி சலுகையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி அரசாணை பிறப்பித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கவும் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக, கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின் வாகனங்களுக்கு 100 சதவீத வரி தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகை காலம் நாளை (2025 டிசம்பர் 31) தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மின் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்தச் சலுகையை அரசு நீட்டித்துள்ளது.
புதிய அரசாணையின்படி, 2026 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் 100 சதவீத மோட்டார் வாகன வரி தள்ளுபடி பொருந்தும். இந்த அறிவிப்பின் மூலம் புதிய மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்குப் பல ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த 'க்ரீன் மூவ்' காரணமாக, வரும் ஆண்டுகளில் சாலைகளில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயரும் என்றும், இது மின் வாகன உற்பத்தித் துறையில் பெரும் முதலீடுகளை ஈர்க்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
