வள்ளுவர் கோட்டத்தில் எஸ்கே-வின் பராசக்தி கண்காட்சி நிறைவு! வைரலாகும் ஸ்பெஷல் வீடியோ!
திரையுலகில் ‘பிரின்ஸ்’ ஆக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிளாக்பஸ்டர் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வரத் தயாராகிவிட்டது.
இந்த நிலையில், ரசிகர்களை 1960-களுக்கே அழைத்துச் செல்லும் விதமாகச் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்ட ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ கண்காட்சி இன்று நிறைவடைவதை ஒட்டி, அந்தப் பிரத்தியேக வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.
வரும் பொங்கல் ரேசில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’. ஜி.வி. பிரகாஷ் குமாரின் அதிரடி இசையில், சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாறுபட்ட பரிமாணத்தில் நடித்துள்ள இந்தப் படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கான விளம்பரப் பணிகளைப் புதுமையான முறையில் மேற்கொண்டு வரும் படக்குழு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘World of Parasakthi’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட கண்காட்சியை அமைத்திருந்தது.
இந்தக் கண்காட்சியில் 1960-களின் காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பழமையான காவல் நிலையம், ரயில் நிலையம் மற்றும் படத்தில் சிவகார்த்திகேயன் பயன்படுத்திய விண்டேஜ் கார் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மிக முக்கிய அம்சமாக, அந்தக்கால ‘டென்ட் கொட்டாய்’ அரங்கம் அமைக்கப்பட்டு, அதில் ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ என்ற பிரத்தியேக வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள், தாங்கள் 60 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்கே சென்றுவிட்ட உணர்வைப் பெற்றதாகத் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த இந்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, இதுவரை டென்ட் கொட்டாயில் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட அந்தச் சிறப்பு வீடியோவை, உலகெங்கும் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படக்குழு இன்று இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் மாஸ் லுக் மற்றும் படத்தின் பிரம்மாண்ட உழைப்பை விளக்கும் இந்த வீடியோ, வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
.jpg)