ஐயாவிடம் தவறான தகவல் சொல்கிறார்கள்! திமுகவை வீழ்த்த 2 வாரங்களில் அமையும் மெகா கூட்டணி!
தைலாபுரம் தோட்டம் தற்போது திமுகவின் கைக்கூலிகளாகச் செயல்படும் இருவர் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர்கள் பாமக நிறுவனர் மருத்துவர் ஐயா அவர்களிடம் தவறான தகவல்களைத் தந்து கட்சியைச் சிதைக்கப் பார்ப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தமிழக அரசின் நிர்வாகத் தோல்விகள் மற்றும் பாமக உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பல அதிரடி உண்மைகளை உடைத்தார். “தமிழக முதலமைச்சருக்கு நிர்வாகம் செய்யத் தகுதியோ, திறமையோ இல்லை. மின்சார உற்பத்தியில் 18 சதவீதத்தை மட்டுமே செய்துகொண்டு, மீதித் தேவைக்காக வெளிச்சந்தையில் யூனிட் 15 ரூபாய் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு கொள்முதல் செய்கிறார்கள். இதனால் மின்வாரியம் 75 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது” எனத் தனது தாக்குதலைத் தொடங்கினார்.
கட்சியின் தற்போதைய சூழல் குறித்துப் பேசிய அவர், “எங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலர் திமுகவின் ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறார்கள். அந்தத் துரோகிகள் தான் இப்போது தைலாபுரத்தை ‘டேக் ஓவர்’ (Take Over) செய்திருக்கிறார்கள். ஐயாவிடம் தினந்தோறும் பொய்யான தகவல்களைச் சொல்லி அவரைத் திசைமாற்றுகிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை” என வேதனையுடன் குறிப்பிட்டார். மேலும், தென் மாவட்டங்களில் நடக்கும் கனிமவளக் கொள்ளை குறித்துப் பேசுகையில், “திருநெல்வேலியில் கனிமவளக் கொள்ளையை ஆதரிக்க ஒரு ‘காட்பாதர்’ (Godfather) இருக்கிறார். அவர் பார்ப்பதற்கு அப்பாவி போலத் தெரிவார். முறையற்ற குவாரிகளால் கேரளா போல இங்கும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக விரைவில் சிபிஐ விசாரணை நடத்தப்படும்” என எச்சரித்தார்.
திமுகவின் வெற்றி ரகசியம் குறித்துப் பேசிய அன்புமணி, “கடந்த தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் பலமாக இல்லாததாலும், போலி வாக்காளர்கள் மூலமாகவும் தான் திமுக வெற்றி பெற்றது. தற்போது எஸ்.ஐ.ஆர் (SIR) பணிகளின் மூலம் 97 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதை முழுமையாக வரவேற்கிறேன். நேர்மையான வாக்காளர் பட்டியல் இருந்தால் திமுக இனி ஜெயிக்க முடியாது. இன்னும் இரண்டு வாரங்களில் தமிழகம் வியக்கும் வகையில் ஒரு ‘மெகா கூட்டணி’ அமையும். அந்தக் கூட்டணி திமுக அரசைச் சுனாமியாக வந்து ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றும்” என்றார். மது ஒழிப்பு குறித்துப் பேசிய அவர், வைகோ நேரடியாக முதலமைச்சர் வீட்டு வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தத் தயாரா? எனச் சவால் விடுத்தார். இந்தச் சந்திப்பின் போது பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
