அன்புமணி மீது ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு! பாமகவின் மறுபிறப்பு இது! உண்மையான பாட்டாளி சொந்தங்கள் சேலம் வர வேண்டும் என மருத்துவர் ஐயா வேண்டுகோள்!
பாட்டாளி மக்கள் கட்சியின் அஸ்திவாரமே இன்று சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியை மீட்டெடுக்கத் தொண்டர்கள் அனைவரும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் எனப் பாமக நிறுவனர் மருத்துவர் எஸ். ராமதாஸ் உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சகட்ட உட்கட்சி மோதல் வெடித்துள்ள சூழலில், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் எஸ். ராமதாஸ் இன்று 5 நிமிட உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். டிசம்பர் 29-ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்குழுவிற்குத் தொண்டர்களை அழைக்கும் வகையில் அமைந்துள்ள அந்த வீடியோவில், தற்போதைய தலைமை மற்றும் கட்சியின் வீழ்ச்சி குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். “இது வெறும் நிர்வாகக் கூட்டம் அல்ல, உண்மையான பாமகவின் மறுபிறப்பு” என அவர் தனது உரையைத் தொடங்கினார்.
கட்சியின் பின்னடைவு குறித்து வேதனையுடன் பேசிய மருத்துவர் ஐயா, “ஒரு காலத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுப் பலமாக இருந்த பாமக, இன்று தனது அங்கீகாரத்தையே இழக்கும் நிலையில் உள்ளது. இதற்குப் பொறுப்பற்ற தலைமையே காரணம். அன்புமணி இராமதாஸ் அவர்கள் லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்தும் அவருக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் அவரது வருகை வெறும் 30% மட்டுமே. தேசிய சராசரி 80% ஆக இருக்கும்போது, அவர் உழைக்கத் தவறிவிட்டார். கட்சியின் தலைமை குறித்த கோரிக்கைகளே இன்று சட்ட ஆய்வின் கீழ் உள்ளன; அஸ்திவாரத்திலேயே சந்தேகம் எழும்போது கட்சி எப்படி முன்னேறும்?” எனக் காட்டமாக வினவினார்.
தன்னுடைய இந்த அழைப்பு குடும்பப் பகையினால் வந்தது அல்ல என்பதைத் தெளிவுபடுத்திய அவர், “இது பதவிக்கான போர் அல்ல. நாம் இணைந்து செதுக்கிய இந்த இயக்கத்தை மீட்டெடுக்கும் போராட்டம். வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வென்று, ஆட்சியில் பங்கு பெற்று, நமது சின்னத்தையும் அங்கீகாரத்தையும் மீட்டெடுப்பதே எனது இலக்கு. இது என் கடைசி அரசியல் யுத்தமாகக்கூட இருக்கலாம்; ஆனால் என் கடைசி மூச்சு வரை என் மக்களுக்காகவும் இயக்கத்திற்காகவும் போராடுவேன். எனவே, டிசம்பர் 29 அன்று சேலம் பொதுக்குழுவில் உழைப்போடும் உண்மையோடும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்” எனத் தொண்டர்களுக்கு உருக்கமான அழைப்பு விடுத்தார்.
