ஐந்தே ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன்! திமுக அரசு தமிழகத்தை அடகு வைத்துவிட்டது எனச் சாடல்!
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் அரசியல் மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, அது பிரிவினைவாதிகளுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையிலான வாழ்வா சாவா போராட்டம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ‘முப்பெரும் விழா மாநாடு’ இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த எழுச்சிமிகு மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்து திமுக அரசின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், "இந்தியாவிலேயே பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டது. இந்த நிதியாண்டில் மட்டும் 51 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு 4 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன், இன்று ஐந்தே ஆண்டுகளில் 9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக எகிறியுள்ளது" எனத் தரவுகளுடன் விளாசினார்.
திமுகவின் ஆன்மீக அரசியல் குறித்துப் பேசிய அவர், "இந்துக்களுக்கு எதிராகச் செயல்பட்டால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கும் என திமுக தவறாகக் கணக்குப் போடுகிறது. பழனியில் முருகன் மாநாடு நடத்தியதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரத்தை இதுவரை அரசு வெளியிடவில்லை. இந்து கோயில்களின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஆய்வு செய்யும் தொல்லியல் துறையினர், அங்கிருக்கும் தர்காவில் ஆய்வு செய்யத் துணிவார்களா? தமிழகத்தில் எந்தத் திட்டத்தைப் பார்த்தாலும் கருணாநிதி பெயர் தான் உள்ளது. ஏன் காந்தியின் பெயரை வைக்க இவர்களுக்கு மனம் வரவில்லை? இவர்கள் உண்மையான தமிழ் விரோதிகள்" எனச் சாடினார்.
மேலும், போக்குவரத்துத் துறையில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் கழகம் என்ற பெயரில் இருந்த 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, தற்போது 'அரசு போக்குவரத்துத் கழகம்' என மாற்றியுள்ளனர். விரைவில் இதற்கு 'கருணாநிதி போக்குவரத்துத் கழகம்' எனப் பெயர் வைக்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனது நண்பர் சீமான் கூறுவது போல இவர்கள் தமிழ் விரோதிகளே. எனவே, வரவிருக்கும் தேர்தலில் ஒருபுறம் திமுக உள்ளிட்ட பிரிவினைவாதிகளும், மறுபுறம் பாஜக தலைமையிலான தேசியவாதிகளும் களத்தில் இருப்போம். இது பிரிவினைவாதத்திற்கும் தேசியவாதத்திற்கும் இடையிலான நேரடிப் போட்டி" என அதிரடியாகத் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
