சசிகலா, உதயநிதி முதல் அஜித் வரை: 2026 தேர்தல் இலக்குடன் அனல் பறக்கும் புத்தாண்டு!
2026-ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மக்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் வெறும் வாழ்த்துகளாக மட்டுமின்றி, அரசியல் போர்க்களத்தின் முன்னோட்டமாகவும் அமைந்துள்ளன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "2025-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் எழுச்சிக்கும் மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. பொருளாதார வளர்ச்சியில் முதலிடம், ஒரு ட்ரில்லியன் டாலர் கனவை நோக்கிய பயணம் என 2025-இல் நாம் படைத்த சாதனைகள் மகத்தானவை. மகளிர் உரிமைத் திட்டம் முதல் காலை உணவுத் திட்டம் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம். 2025-க்கு விடை கொடுத்து, இதுவரை காணாத மாபெரும் வெற்றியை வழங்கவுள்ள 2026-ஐ வரவேற்கத் தயாராவோம். இது தமிழ்நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் பெறப்போகும் மாபெரும் வெற்றி ஆண்டாக அமையும்" என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விடுத்துள்ள செய்தியில், "மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். அதிமுக ஆட்சிக் காலங்களில் மக்கள் எவ்வித அச்சமுமின்றி, நிம்மதியுடன் வாழ்ந்த பொற்காலத்தை இந்த நேரத்தில் பெருமிதத்தோடு நினைவுபடுத்துகிறேன். அப்போது மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. வரும் புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிறைவான செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கட்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைய இந்நாளில் உறுதியேற்போம்" எனப் 'பதிலடி' கொடுத்துள்ளார். இரு துருவத் தலைவர்களின் இந்த வாழ்த்து முழக்கங்கள், 2026-ஆம் ஆண்டின் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டதை உறுதி செய்கின்றன.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், "தமிழ்நாட்டுக்குள் மதம்பிடித்து ஓடி வரத்துடிக்கும் பாசிச சக்திகளையும், அவர்களுக்குப் பாதைப்போட்டுக் கொடுக்கும் பழைய, புதிய அடிமைகளையும் நாம் ஒன்று சேர்ந்து வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டின் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்" என 'பஞ்ச்' பறக்கத் தெரிவித்துள்ளார். அதேவேளையில், அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, "தமிழக மக்களைக் கசக்கிப் பிழிந்த மன்னராட்சி மறைந்து, ஏழை மக்கள் ஏற்றம் பெறும் உண்மையான மக்களாட்சி அமையும் ஆண்டாக 2026 பிறக்கட்டும். ஒன்றுபட்டு நிற்போம், பொற்காலத் தமிழகத்தைப் படைப்போம்" என ஆவேச மடல் விடுத்துள்ளார்.
பா.ம.க. செயல் தலைவர் ப.ஸ்ரீகாந்தி விடுத்துள்ள அறிக்கையில், "2025-இல் சந்தித்த துரோகங்கள் நம்மை இன்னும் கூர்மையாக்கியுள்ளது. 2026-இல் 26 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெறுவது நிச்சயம்; தர்மம் வெல்லும்" என அதிரடி காட்டினார். அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, "2025-ன் தீமைகளைத் துடைத்தெறிந்து, சாதனைகள் நிகழ்த்துவோம் எனும் உறுதியை ஏற்போம்" என வாழ்த்தியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "இயன்றதைச் செய்வோம், இல்லாதவருக்கே என்ற கொள்கையுடன் செயல்படுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, "2026-ஆம் ஆண்டின் விடியல் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையைத் தரட்டும்" என வாழ்த்தியுள்ளார். திரை உலகின் உச்ச நட்சத்திரம் நடிகர் அஜித்குமார், "உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் வரவிருக்கும் இந்தப் புத்தாண்டு வளமான ஆண்டாகவும், வாழ்க்கை அழகானதாகவும் அமைய வாழ்த்துகிறேன்" எனத் தனது ஸ்டைலில் எளிமையாக வாழ்த்தியுள்ளார். புரட்சி பாரதம் கட்சியும் விதிகளுக்கு உட்பட்ட கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மொத்தத்தில், தலைவர்களின் இந்த வாழ்த்துகள் 2026-ஆம் ஆண்டு தமிழக அரசியலில் ஒரு மெகா மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
