சிங்கம் மாதிரி இருந்த ஐயாவை பொம்மை ஆக்கிவிட்டார்கள்! - அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு கடும் காட்டம்!
சேலத்தில் இன்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவே அல்ல; அது ஒரு கேலிக்கூத்து. அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குப்பைத்தொட்டியில்தான் போட வேண்டும் என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சேலம் பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நெருப்பு மாதிரி இருந்த ஐயாவை யாரோ எழுதிக் கொடுப்பதைப் படிக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்” என ஆவேசமாகப் பேசினார்.
சேலத்தில் இன்று நடைபெற்ற மருத்துவர் ராமதாஸ் தரப்பு பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் குறித்துக் கண்ணீர் மல்கக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், அதற்குச் சென்னை பாமக தலைமையகத்தில் இருந்து அனல் பறக்கும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பாலு, “அனைத்துக் கட்சிகளிலும் உயர்மட்டக் குழு விவாதித்துதான் பொதுக்குழுவிற்குத் தீர்மானங்களைக் கொண்டு வருவார்கள். ஆனால், இன்று சேலத்தில் நிறுவனரே பேசாமல் ஒரு கூட்டம் நடந்துள்ளது. பசிக்கிறது என்பதற்காக 27 தீர்மானங்களையும் நிறைவேற்றிவிட்டதாக அறிவிப்பது எந்த விதத்தில் நியாயம்? இந்தத் தீர்மானங்கள் எதுவும் பாட்டாளி மக்கள் கட்சியைக் கட்டுப்படுத்தாது” என முழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவர் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்திக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். “அன்புமணி உங்கள் தம்பியாக இருந்தால் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். ஆனால், பொதுவெளியில் எங்கள் தலைவரை ஒருமையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். 27 ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்தவர் அன்புமணி; ஸ்ரீகாந்தி என்றைக்குப் பாமக-விற்கு வந்தார்? நேற்று வந்தவர் இன்று மேடையில் தனது மகன்களை அமரவைத்துக் கொண்டிருக்கிறார்” எனச் சாடினார். மேலும், பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவராகச் சௌமியா அன்புமணியே தொடர்கிறார் என்றும், ஐநா அங்கீகாரம் பெற்ற அந்த அமைப்பின் தலைவரை மாற்றும் அதிகாரம் இந்தப் போலி பொதுக்குழுவிற்கு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கௌரவத் தலைவர் ஜி.கே.மணி மீது சரமாரியான புகார்களை அடுக்கிய பாலு, “2009-ல் பாமக அங்கீகாரத்தை இழந்தபோது தலைவராக இருந்தவர் ஜி.கே.மணிதான். சிங்கம் மாதிரி கர்ஜித்துக் கொண்டிருந்த ஐயாவை இன்று ஒரு பொம்மை போல மாற்றிவிட்டார்கள். ஐயாவை இதற்கு முன்பு ஜி.கே.மணி இயக்கினார், இப்போது ஸ்ரீகாந்தியும் சேர்ந்து கொண்டு ஏதோ ஒரு காகிதத்தைப் படிக்க வைக்கிறார்கள்” எனக் குற்றம் சாட்டினார். “அன்புமணியைப் போல ஒரு சிறந்த மகன் உலகிலேயே யாருக்கும் அமைய மாட்டார்; தந்தை எவ்வளவு திட்டினாலும் அவர் பொறுமையாகக் கடந்து செல்கிறார். ஜி.கே.மணியைக் கட்சியிலிருந்து நீக்கியதை தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள்” என அவர் அதிரடியாகத் தெரிவித்தார். தந்தை - மகன் இடையேயான இந்தப் போர் இப்போது வழக்கறிஞர்களின் வாதங்களாக உருவெடுத்து பாமக-வை இரண்டாகப் பிளந்து நிற்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
