“திமுக கைக்கூலி எனப் பழியா?” - தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி; 4 நாட்களுக்குப் பின் வீடு திரும்பினார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல், உட்கட்சிப் பூசல் மற்றும் அவதூறு புகார்களால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு இன்று வீடு திரும்பினார்
தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகப் பணியாற்றி வந்தவர் பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல். தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என அவர் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் ஏற்கனவே வருத்தத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சூழலில், சமூக வலைதளங்களிலும் கட்சி வட்டாரத்திலும் அஜிதா ஆக்னல் ஒரு ‘திமுக கைக்கூலி’ எனச் சிலர் வதந்திகளைப் பரப்பியதாகத் தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த 25-ஆம் தேதி சுமார் 15 தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நான்கு நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அஜிதாவின் உடல்நிலை தற்போது சீரான நிலைக்குத் திரும்பியுள்ளது.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி இன்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வெளியே வந்த அவர், அங்கிருந்த சுகம் தரும் விநாயகரை வணங்கிவிட்டுத் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். “கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு அவதூறு முத்திரை குத்துவது வேதனை அளிக்கிறது” என அவரது ஆதரவாளர்கள் முணுமுணுத்தபடி சென்றனர். தவெக-வின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியான பிறகு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற உட்கட்சி மோதல்கள் வெடிப்பது தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
