கரூர் துயரம்: விஜய்யை நோக்கி தி.மு.க.வின் 'ஐ.டி. விங்' துணைச் செயலாளர் வீசிய அஸ்திரம்!
சென்னை, அக்டோபர் 2: கடந்த 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோரமான கூட்டநெரிசல், நாட்டையே உலுக்கி, 41 உயிர்களைப் பலி கொண்டது. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. இந்த விவகாரம் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், நடிகர் சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளருமான திவ்யா சத்யராஜ், விஜய்யை நோக்கி நேரடியாகக் கேள்வி எழுப்பி ஒரு வைரல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஊட்டச்சத்து நிபுணர் என்ற தனது அடையாளத்துடன் வீடியோவில் பேசத் தொடங்கிய அவர், பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கு முதலில் ஒரு முக்கிய அறிவிப்பு விடுத்தார். கூட்ட நெரிசலில் நீண்ட நேரம் நிற்பவர்களுக்குச் சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் வரலாம்; நீர் இழப்பு ஏற்படாமல் இருக்க, சாக்லேட் அல்லது இனிப்பைக் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தோளில் தொங்கவிடக்கூடிய வாட்டர் பாட்டில்கள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசலை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் மெசேஜ் கொடுத்தார். இந்த அடிப்படை ஆரோக்கிய அறிவுரைகளுக்குப் பிறகு, அவர் மெயின் மேட்டருக்குள் சென்றார்.
த.வெ.க. தலைவர் விஜய்யின் பாதுகாவலர்கள், அக்கட்சியின் ஒரு தொண்டரைத் தூக்கி வீசும் காணொளியைக் கண்டதாகக் குறிப்பிட்ட திவ்யா சத்யராஜ், அந்த இளைஞனுக்கு முதுகுத்தண்டிலோ அல்லது தலையிலோ காயம் ஏற்பட்டு, கோமா நிலைக்குச் சென்றிருந்தால் அவரது எதிர்காலமே தொலைந்து போயிருக்கும் என்று ஆவேசமாகக் கூறினார். மேலும், தொண்டர்களைப் பார்த்துப் பயம் கொள்பவர் ஒருபோதும் உண்மையான தலைவர் கிடையாது என்று ஸ்ட்ராங்காகப் பதிவு செய்த அவர், தொண்டர்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பவர்தான் உண்மையான தலைவர் என்றும், மக்களை ஆள வேண்டும் என்று நினைப்பவர் தலைவர் இல்லை, மக்களுக்காகப் பல வருடங்களாக வாழ்பவரே லீடர் என்றும் தனது அட்டாக்கைப் பதிவுசெய்துள்ளார். தி.மு.க.வின் முக்கியப் பொறுப்பில் உள்ள திவ்யா சத்யராஜின் இந்தக் கருத்துகள், அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
