"மணி மகுடத்தை" குறிவைக்கும் வாஷிங்டன்: 90 சதவீத எண்ணெய் வர்த்தகம் முடங்கும் அபாயம் - ஈரான் - இஸ்ரேல் போரின் அடுத்த கட்டம் 'பகீர்'!
தெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த பதினைந்து நாட்களாக எரிந்து கொண்டிருக்கும் போர் நெருப்பு, தற்போது ஈரானின் பொருளாதார நரம்புகளைத் துண்டிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக லெபனானும், அமெரிக்காவின் நிழல் ஆதரவுடன் வளைகுடா நாடுகளும் களத்தில் நிற்க, ஆட்டம் தற்போது ஈரானின் மிக முக்கியமான 'கார்க் தீவு' பக்கம் திரும்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அமெரிக்கா தனது 'சென்காம்' படைப்பிரிவு மூலம் கார்க் தீவின் மீது சக்திவாய்ந்த குண்டு மழையைப் பொழிந்துள்ளது. ஈரானின் 'மணி மகுடம்' என்று வர்ணிக்கப்படும் இந்தத் தீவின் மீதான தாக்குதல், உலக நாடுகளின் கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரசீக வளைகுடாவின் முத்து என்று அழைக்கப்படும் இந்த கார்க் தீவு ஏன் இவ்வளவு முக்கியமானது என்பதை உற்று நோக்கினால், ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வர்த்தகம் இந்த ஒற்றைத் தீவை நம்பியே இருக்கிறது என்பது புலப்படும். ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தீவு, ஈரானின் 'லைஃப் லைன்' ஆகும். பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, வளைகுடா நாடுகள் வர்த்தகத்தை நிறுத்திய போதிலும், ஈரான் மட்டும் நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்யை இந்தத் தீவு வழியாக ஏற்றுமதி செய்து வந்தது. இந்த வருமானத் தடையை உடைக்கவே அமெரிக்கா தற்போது கார்க் தீவை தனது 'டர்ஜெட்' ஆக மாற்றியுள்ளது. சர்வதேச நிபுணர்களின் கணிப்புப்படி, இந்தத் தீவின் மீதான தாக்குதல் ஈரானின் போர் முன்னெடுப்புகளுக்கு வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய 'செக்' ஆகும்.
இந்தத் தீவின் செயல்பாடுகளைக் கவனித்தால், 1984-லேயே அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தனது 'டாப் சீக்ரெட்' ஆவணங்களில் கார்க் தீவை ஈரானின் பலவீனமான மற்றும் பலமான புள்ளியாகக் குறித்திருந்தது. ஈரானின் நிலப்பரப்பில் உள்ள பிரம்மாண்டமான எண்ணெய் வயல்களில் இருந்து பைப்லைன்கள் வழியாகக் கச்சா எண்ணெய் நேரடியாக இந்தத் தீவுக்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கே அபூசர், ஃபரோஸான் போன்ற கடலோர மையங்களில் இருந்து வரும் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, மெகா சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்படுகிறது. 20 மில்லியன் பேரல்கள் வரை தேக்கி வைக்கும் கொள்திறன் கொண்ட இந்தக் கிடங்குகள் தான் ஈரானின் ராணுவத்திற்குத் தேவையான நிதியைத் தடையின்றி வழங்கி வருகின்றன. கார்க் பெட்ரோகெமிக்கல் நிறுவனம் மற்றும் ஃபலாட் ஈரான் எண்ணெய் நிறுவனம் ஆகிய 'பிக் பிளேயர்ஸ்' இங்கே தான் தங்களது தலைமையகத்தைக் கொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தாக்குதல் குறித்துக் கூறுகையில், "மத்திய கிழக்கு வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிகவும் சக்திவாய்ந்த குண்டுகளை கார்க் தீவில் பொழிந்துள்ளோம். நாகரிகம் கருதி எண்ணெய் உற்பத்தி கட்டமைப்புகளை இப்போதைக்கு விட்டுவைத்திருக்கிறோம்," என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது வெறும் 'வார்னிங்' மட்டுமல்ல, ஈரானின் பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானாலும் முடக்கும் வல்லமை அமெரிக்காவிடம் உள்ளது என்பதற்கான 'டெமோ' இது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஒருவேளை அமெரிக்கா இந்தக் கிடங்குகளை முழுமையாக அழித்தால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கற்பனை செய்ய முடியாத உயரத்திற்கு எகிறி, உலகப் பொருளாதாரத்தையே 'கொலாப்ஸ்' செய்துவிடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
மறுபுறம், ஈரான் இந்தத் தாக்குதலைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது. "கார்க் தீவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஊழியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; உற்பத்தி தடையின்றி நடக்கிறது," எனத் தெஹ்ரான் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஈரான் ராணுவம் விடுத்துள்ள பதில் எச்சரிக்கையில், தங்களது எண்ணெய் வளங்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் வயல்களும் 'சாம்பலாக்கப்படும்' என்று 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. மொத்தத்தில், கார்க் தீவு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல, அது உலகப் பொருளாதாரத்தின் 'சுவிட்ச் போர்டு'. அந்த சுவிட்சை யார் அணைப்பது என்பதில் தான் இந்தப் போரின் வெற்றியும் தோல்வியும் அடங்கியிருக்கிறது.
