அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்: அக். 3-ம் தேதி பொது விடுமுறை இல்லை!
தசரா தொடர் விடுமுறைக்கான கோரிக்கை நிராகரிப்பு; தமிழக அரசின் 'தகவல் சரிபார்ப்பகம்' உறுதி.
சென்னை, அக்டோபர் 2: தசரா பண்டிகையை ஒட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக, அக்டோபர் 3ஆம் தேதியை (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அந்தச் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசின் தகவல் சரிபார்ப்பகம் (Fact Check Unit) தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, அக்டோபர் 1 (புதன்கிழமை) ஆயுத பூஜை விடுமுறையாகவும், அக்டோபர் 2 (வியாழக்கிழமை) விஜயதசமி விடுமுறையாகவும் உள்ளதால், அரசு ஊழியர்களுக்குச் சனி மற்றும் ஞாயிறுடன் சேர்த்து 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு நிலவியது. இதனால் அரசு அலுவலர்கள் தரப்பில் இந்தப் பொது விடுமுறை கோரிக்கை மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டால், வார முழுவதும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இந்த தொடர் விடுமுறை சற்று இளைப்பாறலைத் தரும் என்றும் சென்டிமென்ட் உருவாக்கப்பட்டது.
எனினும், அரசு அலுவலர்கள் தரப்பில் வைக்கப்பட்ட இந்த முக்கிய கோரிக்கைக்குத் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தும் விதமாக, அக்டோபர் 3ஆம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல என்று அரசின் தகவல் சரிபார்ப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) வழக்கம் போல வேலை நாளாகவே இருக்கும் என ஃபைனலாகிவிட்டது. தொடர் விடுமுறைக்காகக் காத்திருந்த அரசுப் பணியாளர்களுக்கு இது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
