IND-W vs SA-W Final: வரலாறு படைத்த இந்தியா: முதன்முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்று சாதனை! 2025 Women's World Cup Triumph: India Wins Maiden Title, Defeating South Africa in Final
அசத்திய ஹர்மன்ப்ரீத் படை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது!
மும்பையில் தீப்தி ஷர்மா - ஷஃபாலி வர்மா இணையின் அபார ஆட்டம்; வோல்பர்ட்டின் சதம் வீண் – 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, வோல்பர்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மகளிர் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்ததுள்ளது.
நவம்பர் 2, 2025 அன்று மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் வோல்பர்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இந்திய அணி சார்பில், துவக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா – 87 ரன்கள், தீப்தி சர்மா – 58 ரன்கள், ஸ்மிருதி மந்தனா – 45 ரன்கள் குவித்தனர்.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில், அயபோங்கா காக்கா 9 ஓவர்களில் 58 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது.
அடுத்து 299 ரன்கள் எடுத்தால் உலகக் கோப்பையை வெல்லலாம் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க வீரர்கள், கேப்டன் வோல்பர்ட்டும், தம்மின் பிரிட்ஸும் சற்று அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடி 50 ரன்களைச் சேர்த்தனர். எனினும், பிரிட்ஸ் 23 ரன்களில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த போஸூம் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். லூஸ் 25 ரன்களிலும், காப் 4 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.
தென்னாப்பிரிக்கா அணியின் ஒரே நம்பிக்கையாகத் திகழ்ந்த கேப்டன் வோல்பர்ட் மட்டும் சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளை கைபற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்தியாவின் வெற்றியை எளிமையாக்கினார்.
வெற்றி இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 246 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்று, மகளிர் உலகக் கோப்பையை வரலாற்றில் முதன்முறையாக வென்று பெருமை சேர்த்து சரித்திரம் படைத்துள்ளது.
