Grindr App மோசடி: மென்பொருள் பொறியாளரை மிரட்டி ₹24,000 கொள்ளை – 6 பேர் கும்பல் கைது! Grindr App Scam: 6-Member Gang Arrested for Extorting Software Engineer in Chennai
மணப்பாக்கத்தில் அதிரடி தாக்குதல்; GPay மூலம் வங்கிக்குப் பணம் மாற்றம் – திட்டமிட்ட சதி அம்பலம்!
முகலிவாக்கம், ஏ.ஜி.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்த கௌதம் என்ற மென்பொருள் பொறியாளர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் Grindr App மூலம் ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சாட் (Chat) செய்து வந்துள்ளார். கடந்த 01.11.2025 அன்று மாலை கௌதம், ராஜேஷிடம் சாட் செய்தபோது, ராஜேஷ் நேரில் வருமாறு அழைத்து ஒரு லொக்கேஷனை அனுப்பியுள்ளார்.உடனே கௌதம் தனது இருசக்கர வாகனத்தில் மணப்பாக்கம், உட்கிரிக்கவுண்டி அவென்யூ அருகே உள்ள ஒரு காலியிடத்திற்குச் சென்று ராஜேஷுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கே இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவர்கள் இருவரையும் மிரட்டியது. கௌதமை கையால் தாக்கி, அவரது செல்போனைப் பறித்து, கடவுச்சொற்களைக் கேட்டுள்ளனர். பின்னர், அவரது செல்போனிலிருந்த GPay மூலம் ரூ.24,000/- பணத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவிட்டு, செல்போனைத் திருப்பிக் கொடுத்துள்ளனர்.அந்தக் கும்பல், ராஜேஷை ஒன்றும் செய்யாமல் அங்கிருந்து தப்பிச் சென்ற பின்னரே, அங்கு வந்த ஐந்து நபர்களும் ராஜேஷின் நண்பர்கள் என்பது கௌதமுக்குத் தெரிய வந்தது.
இது ஒரு திட்டமிட்ட சதி நாடகம் என அறிந்த கௌதம், உடனடியாக நந்தம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் முறையான புகார் அளித்தார்.நந்தம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட போரூரைச் சேர்ந்த மணிகண்டன், ராஜேஷ், வரதராஜ் (எ) சஞ்சய், கோகுல், கணேஷ்குமார், மற்றும் கௌதம் ஆகிய 6 பேரையும் நேற்று நந்தம்பாக்கம் பகுதியில் விரைந்து கைது செய்தனர்.விசாரணையில், ராஜேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து, Grindr App மூலம் அறிமுகமான கௌதமை தவறான செயலுக்கு வரவழைத்து, அவரை மிரட்டிப் பணம் பறிக்கும் திட்டத்தை முன்னரே தீட்டியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 ஐபோன்கள் உட்பட 5 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
.jpg)