'மாஸ்டர்' பட நடிகை அசத்திய சம்பவம்.. நள்ளிரவில் தனியாகத் தேடுதல் வேட்டை: தைரியமாகத் திருடனைப் பிடித்த பெண் மருத்துவர்!
நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நடித்த பெண் மருத்துவர் டாக்டர் ஷில்பா நிகர், தனது தனியார் கிளினிக்கில் லேப்டாப்பை திருடிச் சென்ற திருடனை, நள்ளிரவில் தைரியமாகத் தேடிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பகீர் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது கிளினிக்கில் ஊழியர்கள் மூடவிருந்த நேரத்தில் நுழைந்த சந்தேக நபர், இரண்டு நிமிடங்களுக்குள் லேப்டாப்பை திருடிச் சென்றுள்ளான். சமூக வலைதளப் பக்கத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் இந்தச் சம்பவத்தை அவரே வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சந்தேக நபர் குறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்துப் பணியில் இருந்த காவலர்களும், ஊழியர்களும் சுமார் 45 நிமிடங்கள் தேடிய பிறகு, காலையில் தீவிரமாகத் தேடலாம் எனக் கூறிச் சென்றுவிட்டனர். ஆனால், காவல்துறையின் அறிவுரையை மீறி, தனது மன உறுதியை நம்பிய டாக்டர் ஷில்பா, தனியாகவே நள்ளிரவில் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளார். அப்போது, ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உதவி அவருக்குக் கிடைக்க, மேலும் சில இளைஞர்களும் பைக்குகளில் வந்து வேறு வழிகளில் தேட உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இரண்டு மணி நேரம் அலைச்சலுக்குப் பிறகும் திருடன் பிடிபடாததால் பலரும் கைவிட்ட நிலையில், டாக்டர் ஷில்பாவும் ஆட்டோ ஓட்டுநரும் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இருந்து சூளைமேடு பாலம் வரை தேடிச் சென்றுள்ளனர். அங்கு மதுபோதையில் தள்ளாடியபடி நடந்து வந்த ஒருவனைக் கண்ட டாக்டர் ஷில்பா, அவனது உடையை மாற்றியிருந்தாலும், உள்ளே அணிந்திருந்த சட்டையையும் செருப்பையும் வைத்து, அவன் சிசிடிவி காட்சியில் இருந்த திருடன்தான் என்று துல்லியமாகக் கண்டுபிடித்துள்ளார். மேலும், யாரும் அடையாளம் காணாதவாறு, அவன் குப்பை மூட்டையைச் சுமந்து வீடற்றவர் போல வேடமிட்டு நடந்து சென்றதையும் உறுதி செய்துள்ளார்.
உடனடியாக ஆட்டோவை நிறுத்தி விசாரித்தபோது, திருடன் தனது பையில் குப்பைதான் இருப்பதாகக் காட்டியுள்ளான். டாக்டர் ஷில்பா அதை நம்பித் திரும்பும் நேரத்தில், ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பையின் ஓரத்தில் தெரிந்த லேப்டாப்பின் ஒளியைக் கவனித்து, சந்தேக நபருக்கு ஓர் அறை கொடுத்துள்ளார்.
உடனடியாக கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் குறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட, அவர்கள் வந்து திருடனைக் கைது செய்தனர். திருட்டுப் போன லேப்டாப்பும் மீட்கப்பட்டதுடன், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளான். "மற்றவர்கள் அனைவரும் கைவிட்டபோதும் நான் விட்டுக்கொடுக்கவில்லை. வாழ்க்கையில் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கக் கூடாது" என்று டாக்டர் ஷில்பா நிகர் தனது தைரியமான அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார்.
