உள்நாட்டுத் தயாரிப்பு 'Flamingo' ஏவுகணையை முதன்முறையாக பயன்படுத்திய உக்ரைன்.. 3,000 கி.மீ. தாக்குதல் திறன் கொண்ட ஆயுதம்!
ரஷ்யா–உக்ரைன் இடையேயான பயங்கரப் போர் ஓய்வின்றித் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று இரவு ரஷ்யாவின் எரிசக்தி மையங்களை நேரடியாகக் குறிவைத்து உக்ரைன் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தப் போரின் வரலாற்றுச் சாதனையாக, உக்ரைன் உள்நாட்டிலேயே தயாரித்த நீண்ட தூரம் சென்று தாக்கும் 'Flamingo' ஏவுகணையை முதன்முறையாகப் பயன்படுத்தி, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் முக்கிய உள்கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் உக்ரைனின் புதிய போர்த் திட்டத்தின் ஆரம்பம் இது என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ராணுவத்தின் பொதுப் பணியாளர் குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவலின்படி, இந்தத் தாக்குதலில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Flamingo ஏவுகணையுடன் பல ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கிரிமியாவில் உள்ள எண்ணெய் முனையம், ட்ரோன் சேமிப்புத் தளங்கள், ரேடார் நிலையம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் குறிவைக்கப்பட்டன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த Flamingo ஏவுகணையைத் தமது நாட்டின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள "மிகவும் வெற்றிகரமான ஏவுகணை" என்று பாராட்டினார்.
Fire Point என்ற உக்ரைனிய நிறுவனம் தயாரித்துள்ள இந்த Flamingo ஏவுகணை 3,000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என்றும், 1,150 கிலோகிராம் வெடிகுண்டைத் தாங்கிச் செல்லும் வலிமை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ஆயுத விநியோகத்தில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, உக்ரைன் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தக்க வைக்க தற்சார்பு உற்பத்தியை விரைவுபடுத்தி உள்ளது.
உக்ரைனின் இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், கிரிமியா உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கள் வான்பாதுகாப்புப் படைகள் 130 உக்ரைனிய ட்ரோன்களை வழிமறித்துத் தாக்கியதாகக் குறிப்பிட்டாலும், ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து ரஷ்யா இதுவரை எந்த அதிகாரப்பூர்வத் தகவலையும் வெளியிடவில்லை.
