ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி சம்பவம்: 12-ம் வகுப்பு மாணவி ஷாலினி ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு; முனிராஜ் கைது!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், தன்னைக் காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் புகாரை ஏற்கெனவே பெற்றோர் கண்டித்தும், குற்றவாளி விடாப்பிடியாக பின் தொடர்ந்து வந்து இந்தக் கொடூரச் செயலைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமேஸ்வரம் அடுத்த சேரங்காட்டை பகுதியைச் சேர்ந்த மாணவி ஷாலினி, அப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் மாணவி இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்ற இளைஞர் அம்மாணவியைப் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
அப்போது, முனிராஜ் மீண்டும் காதலை ஏற்கும்படி வற்புறுத்தியுள்ளார். மாணவி ஷாலினி வழக்கம் போல் அதனைப் பொருட்படுத்தாது கடந்துச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி ஷாலினி ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்துள்ளார்.
மாணவி ஷாலினியை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும், மாணவி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. காலையிலேயே தமிழகத்தையே உலுக்கும் சம்பவமாக இந்த விவகாரம் மாறியுள்ளது.
மாணவியை கொலை செய்த இளைஞர் முனிராஜை போலீஸார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணையில், முனிராஜ் ஏற்கெனவே மாணவி ஷாலினியைப் பின் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளதும், இதுகுறித்து மாணவி தனது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் முனிராஜை அழைத்து, இனி தங்கள் மகளைப் பின் தொடரக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். எனினும், அதனைப் பொருட்படுத்தாது முனிராஜ் இன்று இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார்.
மாணவியின் கொலைச் செய்தி கேட்டு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை மனமுடைய செய்துள்ளது. தங்கள் மகளைக் கொன்ற முனிராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொலைக்குப் பின் முனிராஜ் மாணவியைப் பின் தொடர்ந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. முனிராஜிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
