மாநிலங்களுக்கு இடையேயான சாலை வரிப் பிரச்சினை: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அடுத்தகட்ட போராட்டத்திற்குத் தயார்; தமிழக அரசுக்குக் கோரிக்கை!
பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் அதிக கட்டணம் வசூலிப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த கோவை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், 'மல்லிகைப் பூ விலை, விமான டிக்கெட் விலை கூடுவது இல்லையா?' என்று செய்தியாளர்களிடம் பொறுப்பற்ற விதத்தில் கேள்வி எழுப்பி அலட்சியம் காட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அண்டை மாநிலங்களுக்குப் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கோவை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருமூர்த்தி மற்றும் செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் தமிழக அரசு உடனடியாக ஆம்னி பேருந்துகளின் கட்டண நிர்ணயத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துச் சிக்கலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கட்டண உயர்வு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், பண்டிகைக் காலங்களில் மல்லிகைப் பூ, ரயில், விமான டிக்கெட் கட்டணங்கள் கூடுதலாக விற்கப்படுகின்றன அதைக் கேளுங்கள் என்று திசை திருப்பி அதிர்ச்சி அளித்தனர்.
மாநில சாலை வரிப் பிரச்சினை மாநில சாலை வரி தொடர்பாகத் தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.
தேசிய அனுமதி பெற்று வாகனங்களை இயக்கி வந்தாலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தற்போது மாநில சாலை வரி என்ற பெயரில் லட்சக்கணக்கில் வரி வசூலிக்கின்றன. இதனால் வாகனங்களை இயக்க முடியாத சூழல் உள்ளது.
நமது பேருந்து அருகில் உள்ள மாநிலங்களுக்குச் சென்றால், பேருந்துகளை அபராதம் செலுத்தி நிறுத்திவிடுகிறார்கள். இதனால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து இந்திய அனுமதி வாங்கியும் இந்த மாநில வரியையும் கட்டச் சொல்வதால், மற்ற மாநிலங்களும் இதையே கடைப்பிடிக்கின்றன. முதலில் தமிழகத்தில்தான் அதிகாரிகள் இந்த மாநில சாலை வரியை வசூலிக்க ஆரம்பித்தனர்; இதையே மற்ற மாநில அதிகாரிகளும் கடுமையாகப் பின்பற்றுகிறார்கள்.
கடந்த 5 நாட்களாகப் பக்கத்து மாநிலங்களுக்குப் பேருந்தை இயக்க முடியாத நிலை உள்ளதால், தமிழக முதல்வரும், அமைச்சரும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும், போக்குவரத்து அமைச்சரிடம் நல்ல பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நீதிமன்றத்திற்குச் சென்றால் உடனடியாகத் தீர்வு கிடைக்காது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
