நோயாளிகளின் உறவினர்கள் உடைமைகளுக்கு மெட்டல் டிடெக்டர் பரிசோதனை கட்டாயம்; கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சோதனை!
கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் சுமார் 10,000 பேர் சிகிச்சை பெறும் கோவை அரசு மருத்துவமனையில், பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்த நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் அவ்வப்போது நிகழும் எதிர்பாராத சம்பவங்களைத் தடுக்கவும், உள்நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த முக்கிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நோயாளிகளின் உற்றார் உறவினர்கள் கொண்டு வரும் உடைமைகள் மற்றும் பைகள் மெட்டல் டிடெக்டர் கருவி வாயிலாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே மருத்துவமனையில் 120 தனியார் காவலர்கள் இரவு, பகலாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதை மேலும் மேம்படுத்தும் நோக்கில், தற்போது மருத்துவமனையின் இரண்டு நுழைவாயில்கள், குழந்தைகள் சிகிச்சை பெரும் இடங்கள் உள்ளிட்ட ஏழு முக்கியப் பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தப்பட்டு, தீவிர சோதனை நடந்து வருகிறது. இந்தக் கடுமையான பாதுகாப்பு வளையத்தால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
.jpg)