திருமணமான 7 ஆண்டுகளில் மன உளைச்சல்; காயம் இன்றித் தப்பிய சந்தியா குணா – திருக்காட்டுப்பள்ளிப் போலீசார் விசாரணை!
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புதிய பாலத்தில், வீட்டில் சண்டை போட்டுவிட்டு மன வருத்தத்துடன் வந்த இளம் பெண் ஒருவர் காவிரி ஆற்றில் குதித்த நிலையில், பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் அவரை அதிர்ஷ்டவசமாக மீட்டனர்.
கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா குணா என்ற அந்தப் பெண் விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு வயதுக் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், சந்தியா தனது அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு, கோபித்துக்கொண்டு திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புதிய பாலத்திற்கு வந்து அங்கிருந்து காவிரி ஆற்றில் திடீரெனக் குதித்துள்ளார்.
ஆற்றில் பெண் குதித்ததைக் கண்ட பொதுமக்கள் உடனடியாகத் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்த மறுகணமே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்களின் உதவியுடன் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து, சந்தியாவைக் கடுமையான போராட்டத்திற்குப் பின் காப்பாற்றினர்.
சந்தியா குணாவுக்கு எந்தவிதமான காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார். மீட்கப்பட்ட அவரை திருக்காட்டுப்பள்ளி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
