கிண்டி வியாபாரியின் சொத்து மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளி டெல்லியில் கைது; கூட்டாளிகள் தலைமறைவு!
சென்னை கிண்டிப் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்தை, போலி ஆவணங்கள் தயாரித்துப் பொது அதிகாரப் பத்திரத்தின் மூலம் மோசடியாக வங்கியில் அடமானம் வைத்து, ரூ.75.80 லட்சம் கடன் பெற்று ஏமாற்றிய வழக்கில், முக்கியக் குற்றவாளி உட்பட மேலும் இருவரைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிதி மோசடி தொடர்பாகப் புகார் அளித்த அப்துல் காதர் அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புகார்தாரரான சென்னை கிண்டியைச் சேர்ந்த அப்துல் காதர், தனது மகளின் திருமணச் செலவுகளுக்காகப் பணம் தேவைப்பட்ட நிலையில், தனது நண்பரான சிவா என்பவரின் மூலம் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த விநாயகா ஆச்சாரியா என்பவரை அணுகியுள்ளார். விநாயகா ஆச்சாரியா, அப்துல் காதரின் கிண்டிச் சொத்தை அடமானம் வைத்துப் பணம் பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால், அவர் அப்துல் காதருக்குத் தெரியாமல், அவரது சொத்துக்குத் தன் பெயரில் ஒரு பொது அதிகாரப் பத்திரத்தைப் பெற்றதோடு, அப்துல் காதரின் "வாழ்நாள் சான்றிதழையும்" போலியாகத் தயாரித்துள்ளார்.
பின்னர், அந்தச் சொத்தை அப்துல் காதருக்குத் தெரியாமல் சேலத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கு விற்பனை செய்த விநாயகா ஆச்சாரியா, அந்த விற்பனை ஆவணத்தைப் பயன்படுத்தி ICICI வங்கியின் அவிநாசி கிளையில், இடம் வாங்குவதற்காக ரூ.75.80 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்தக் கடன் தொகையை விநாயகா ஆச்சாரியா, சுஜாதா மற்றும் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து மோசடியாகப் பிரித்துக் கொண்டு அப்துல் காதரை ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக 2023ஆம் ஆண்டு சென்னை பெருநகரக் காவல் மத்திய குற்றப்பிரிவில் (CCB) வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், விநாயகா ஆச்சாரியா, சிவா, அவரது மனைவி சர்மிளா, சுஜாதா, மற்றும் விநாயகா ஆச்சாரியாவின் மனைவி தாட்சாயிணி ஆகியோர் கூட்டு சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது . ஏற்கெனவே, சிவா என்பவர் 28.03.2024 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த புது டெல்லியைச் சேர்ந்த விநாயகா ஆச்சாரியாவை கடந்த 25.10.2025 அன்று புது டெல்லியிலும், சேலத்தைச் சேர்ந்த சுஜாதாவை 07.11.2025 அன்று சேலத்திலும் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் தலைமறைவாக உள்ள மற்ற எதிரிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
