மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளின் நிலை குறித்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை.. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
முன்னாள், இந்நாள் எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக 193 வழக்குகளும், புதுச்சேரியில் 23 வழக்குகளும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பல வழக்குகள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து தீவிரமான அறிவுறுத்தலை வெளியிட்ட நீதிபதிகள், தடை விதிக்கப்படாத வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் தேவையில்லாமல் தள்ளிவைக்கக் கூடாது எனவும், விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் கண்டிப்புடன் உத்தரவிட்டனர். குறிப்பாக, குற்றச்சாட்டுப் பதிவுக்காக விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அது தீவிரமாகக் கருதப்படும் என்றும் அமரவு எச்சரித்தது.
உயர் நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் முழு விவரங்களை அறிக்கையாக இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும்படி தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நவம்பர் 25-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
