மண்டலப் போட்டியில் சாதனை: காசியாபாத் இறுதிச் சுற்றில் தமிழக பேரிடர் மீட்புப் படைக்கு வெற்றிக் கோப்பை!
ரசாயன, உயிரியல், அணுசக்தி மற்றும் தீவிரவாதத் தாக்குதல் போன்ற ஆபத்துகளின் போது, விரைந்து செயல்பட்டுப் பொதுமக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற தேசிய அளவிலான பேரிடர் மீட்புப் போட்டியில் தமிழகக் காவல்துறை முதலிடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது. தமிழகக் காவல்துறையின் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 13-ம் அணியானது தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவாகச் செயல்பட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நவம்பர் 10 முதல் 12 வரை நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலானப் போட்டியில் இந்த மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டி, தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தூய்மைப்படுத்துவது போன்ற மிக முக்கியமான செயல்பாடுகளை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இந்தப் போட்டிக்குத் தகுதிபெறுவதற்கு முன்பாக, தமிழகப் பேரிடர் மீட்புப் படை, ஒடிசாவில் நடைபெற்ற தென்னிந்திய மண்டல அளவில் நடந்தப் போட்டியிலும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த அணிகளுடன் போட்டியிட்டு முதல் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள நான்கு மண்டலங்களிலும் நடத்தப்பட்டப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த எட்டு அணிகள் (தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரா) தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன. இதில், விறுவிறுப்பான போட்டியின் முடிவில் தமிழ்நாடு காவல்துறை பேரிடர் மீட்புப் படை தங்கப் பதக்கத்தைப் பெற்று முதலிடத்தை உறுதிப்படுத்தியது. உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
டெல்லியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றிக் கோப்பையை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், தேசியப் பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர் பியூஸ் ஆனந்த் முன்னிலையில் வழங்கினார். இந்தக் கோப்பையை தமிழகக் காவல்துறையின் செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆர்.தினகரன் பெற்றுக் கொண்டார். இந்த தேசியச் சாதனையைப் பாராட்டி தமிழக காவல்துறை டிஜிபி வெங்கடராமன் வாழ்த்துகள் தெரிவித்தார்.
