தமிழக வெற்றிக் கழகம் ஒரு சாதாரண இயக்கம்.. தன்னை நிரூபிக்காத அமைப்புடன் கூட்டணி.. டிடிவி தினகரனை விமர்சித்த சரத்குமார்!
சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த தனது நிர்வாகிகளுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டதைக் கொண்டாடும் பாராட்டு விழாவில் பங்கேற்ற பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். தன்னோடு பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குப் பாஜகவில் உயரிய அந்தஸ்து கிடைக்க உதவிய முன்னணி பாஜக தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தை மிகக் கடுமையாக விமர்சித்த சரத்குமார், "தவெக மக்களுக்காக என்ன செய்து இருக்கிறார்கள்? அவர்கள் ஒரு சாதாரண அரசியல் இயக்கமாகவே செயல்படுகிறார்கள்; அவர்களிடம் அரசியல் புரிதல் இல்லை என்று சுட்டிக்காட்டினார். மேலும், எஸ்.ஐ.ஆர் (வாக்காளர் தீவிர திருத்தம்) குறித்து புரியாமல் தமிழக வெற்றிக் கழகம் போராட்டத்தை முன்னெடுப்பது சரியாகாது. அரசியலில் ஊறி, பொதுவாழ்வில் செயல்பட்டவன் நான்; விஜய் சொல்லும் எதையும் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று பிரகடனம் செய்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் வரவழைப்பது குறித்து விஜய்யைக் கடுமையாகக் கேள்வி எழுப்பிய அவர், உங்கள் சொந்த மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நீங்கள் என்ன தலைவர்? என்றும் பகீர் கேள்வியெழுப்பினார்.
அமமுக தலைவர் டிடிவி தினகரன், தன்னை நிரூபிக்காத தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதாகப் பேசுவது அவர் இயக்கத்திற்கு அவலம் என்று வலியுறுத்தினார். இந்த விமர்சனம் கேவலம் என்ற வார்த்தை கிடையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு; அதுதான் என் விருப்பமும் என்றும் அவர் ஆசை தெரிவித்தார். அதேபோல், பா.ம.க. தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் ஒன்றாக இணைய வேண்டும் என்றும் அவர் விருப்பத்தைத் தெரிவித்தார்.
சாதி ரீதியான படங்களைத் தொடர்ந்து கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, இதுபோல் நடந்திருக்கிறது; இனிமேல் நடக்கக் கூடாது என்று சொல்வதில் தவறில்லை என்று சுட்டிக்காட்டினார். வன்முறையைத் தூண்டும் விதமாக ஆதவ் அர்ஜூனா போன்றவர்கள் பேசுவது சரியல்ல என்று கண்டனம் தெரிவித்தார். வன்முறையைத் தூண்டும் விதமாக யாரும் பேசக் கூடாது. பாஜக மாநிலத் தலைவர் பதவி குறித்த சலசலப்பு பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும், நயினார் நாகேந்திரன் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் என்றும் கூறி சரத்குமார் பேட்டியை நிறைவு செய்தார்.
