குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் காஷ்மீர் டாக்டர் 'உமர் உன் நபி' என உறுதி; நான்கு நகரங்களில் ஒருங்கிணைந்த தாக்குதலுக்குத் திட்டம்!
தலைநகரை உலுக்கிய கார் வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர புலனாய்வுத் துறை மேற்கொண்டு வரும் விசாரணையில், சதிகாரர்களின் அடுத்தடுத்த பகீர் திட்டங்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் இன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
காரை ஓட்டிவந்து தாக்குதலை நிகழ்த்தியவர் காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் உமர் உன் நபி என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குண்டுவெடிப்பில் சிதறிய அவரது உடல் பாகங்களிலிருந்து பெறப்பட்ட DNA மாதிரிகளை அவரது தாயாரின் DNA மாதிரியுடன் ஒப்பிட்டு இந்த அடையாளம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்ட எட்டு நபர்கள் இணைந்து, தாக்குதல் செலவுகளுக்காக உமர் உன் நபியிடம் சுமார் ₹20 லட்சம் நிதியை சேகரித்து ஒப்படைத்ததாகவும் விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பிடிபட்டுள்ள i20 மற்றும் Eco sport கார்கள் தவிர, மேலும் இரண்டு பழைய வாகனங்களில் வெடிபொருட்களைப் பொருத்தும் முயற்சியில் சதிகாரர்கள் ஈடுபட்டிருந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எட்டு நபர்களும் நான்கு ஜோடிகளாகப் பிரிந்து, நாட்டின் வெவ்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, சுமார் ₹3 லட்சம் மதிப்புள்ள 20 குவிண்டாலுக்கும் (2,000 கிலோ) அதிகமான NPK உரத்தை குருக்கிரம், நூஹ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாகப் பெற்றுள்ளனர். இந்த அளவுக்கதிகமான உரத்தில் இருந்துதான் வெடிபொருட்களைத் தயாரிக்க முயற்சி நடைபெற்றுள்ளது.
இந்த தீவிரவாதச் சதித் திட்டத்தின் முக்கியக் கண்ணியாகக் கைது செய்யப்பட்ட டாக்டர் முசம்மில், 2021-2022 காலகட்டத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் நண்பர்களுடன் தொடர்பில் இருந்து, ஐஎஸ்ஐஎஸ்-ன் துணைக் குழுவான அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் என்ற அமைப்பில் இணைந்தது தற்போது புலனாய்வில் தெரியவந்துள்ளது.
உமர் உன் நபி தனது நண்பர்களுடன் ரகசியத் திட்டங்களைப் பகிர்ந்து கொள்ள 'சிக்னல் ஆப்' (Signal App) மூலம் ஒரு தனிப்பட்ட குழுவை உருவாக்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் டாக்டர் முசம்மில், டாக்டர் ஆதில், உமர் மற்றும் ஷாஹீன் ஆகியோர் தொடர்ந்து விசாரணை வளையத்தில் உள்ளனர்.
