பிரம்மாண்ட பிக்கில் பால் நிகழ்வில் பங்கேற்பு; பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தலைவருடன் சந்திப்பு!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு முதல் கோப்பையைப் பெற்றுத் தந்து, இந்தியாவுக்கேப் பெருமை சேர்த்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு முதன்முறையாகச் சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். அவர் இன்று சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். மரியாசீனா ஜான்சன் மற்றும் பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர். மரி ஜான்சன் ஆகியோரைச் சந்தித்து உரையாடினார்.
தமிழகத்தில் 38 வருடங்களாகக் கல்விச் சேவை செய்து வரும் சத்யபாமா நிறுவனம், இந்தியாவிலேயே மிக பிரம்மாண்டமான பிக்கில் பால் போட்டியை நடத்துகிறது. மிக உயர்தர வசதியுடன் தயாரிக்கப்பட்ட 6 உள்விளையாட்டரங்கத்தில் அனைத்து வயதினரும் கலந்துகொள்ளும் வகையில் இப்போட்டிகள் இன்று மதியம் நடத்தப்படவுள்ளன. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், இந்த பிரம்மாண்ட நிகழ்வில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பின், ஹர்மன்ப்ரீத் கவுரின் இந்தக் கல்லூரி வருகை மாணவர்களுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் தருணமாக அமைந்துள்ளது
