மத்திய திட்டங்களை எதிர்க்கும் மனநிலை; போலி வாக்காளர்களை அகற்றவே திமுக எதிர்ப்பு என சவுந்தரராஜன் பகிரங்கக் குற்றச்சாட்டு!
தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் நடத்தி வரும் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR – Special Intensive Revision) என்ற செயல்முறைக்கு எதிராக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையைப் புரிந்துகொள்வதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்குப் போதிய அறிவில்லை என்று அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
வழக்கம்போல் மத்திய அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையிலேயே சிறப்பு தீவிரத் திருத்தச் செயல்முறையை திமுக எதிர்ப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் விரிவான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் நடத்தி வரும் 'SIR – Special Intensive Revision' என்ற செயல்முறையை, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 'Special Intensive Registration' (சிறப்பு தீவிர பதிவு) எனத் தவறாகக் குறிப்பிடுகிறார். அவருக்கே 'SIR' என்பதன் பொருள் சரியாகத் தெரியவில்லை என்றால், இதன் உண்மையான செயல்முறையும் அவருக்குத் தெரியாது என்பதில் ஐயமில்லை என்று ஆளுநர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
இந்தக் குழப்பமான நிலை இருந்தபோதிலும், அரசியல் காரணங்களுக்காகவே இதை திமுக எதிர்க்கிறது. புதிய வாக்காளர்கள் (18 வயது நிரம்பியவர்கள்) சேர்த்தல், மரணமடைந்தவர்களின் பெயர்கள் நீக்குதல், இரட்டை வாக்குரிமை இருந்தால் அவற்றைக் கண்டறிந்து அகற்றுதல் ஆகியவையே SIR-ன் முதன்மையான நோக்கம் ஆகும். இந்தச் செயல்முறை முழுவதும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். மேலும், இந்த 'SIR' செயல்முறை தமிழகத்தில் மட்டும் அல்லாமல், பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட மொத்தம் 12 மாநிலங்களில் நடைபெறுகிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
திமுகவுக்கு இந்த வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு செயல்முறை பிடிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் தவறான வாக்காளர் பட்டியல் முறைகேடுகளால் வெற்றி பெறும் கட்சி. சமீபத்தில் திமுகவின் தீவிர முயற்சியால் சேர்க்கப்பட்ட போலி வாக்காளர்களை, தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இந்தத் தீவிரத் திருத்தம் கண்டுபிடித்து அகற்றிவிடும் என்பதாலே அவர்கள் SIR கண்டு பயப்படுகின்றனர்" என்றும் தமிழிசை சௌந்தரராஜன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தமிழிசை சௌந்தரராஜன், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது குறித்த வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
