விசா இனிமேல் தற்காலிகமாக மட்டுமே இருக்கும்: வெளிநாட்டு ஊழியர்களைப் பயிற்சிக்குப் பயன்படுத்த டிரம்ப் நிர்வாகம் புதிய வியூகம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முந்தைய கடுமையான நிலைப்பாட்டில் இருந்து விலகி, H-1B விசா திட்டம் குறித்துச் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். எனினும், அவரது நிர்வாகம் H-1B விசா கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவுள்ளதாக டிரம்ப்பின் ஆலோசகர் ஸ்காட் பெஸ்சென்ட் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் முந்தைய நிலைப்பாடு மாற்றம்: முன்னதாக, அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறிவந்தார். அவர் வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில், H-1B விசா பெற ஆண்டுக்கு $1,00,000 (சுமார் ₹88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, புதிய விதிகளையும் அறிவித்திருந்தார். இந்தக் கட்டண உயர்வு இந்தியர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், அதிபர் டிரம்ப், "தனது நிர்வாகம் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது என்றாலும், சிக்கலான மற்றும் பல உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை. எனவே, உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம்" என்று கூறி, H-1B விசா திட்டத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், நீண்ட காலமாக வேலையில்லாத அமெரிக்கர்களைப் பாதுகாப்பு போன்ற முக்கியமான துறைகளில் விரிவான பயிற்சி இல்லாமல் சிக்கலான பணிகளில் பணியமர்த்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிபர் டிரம்ப்பின் பொருளாதாரத் துறைச் செயலாளரும் ஆலோசகருமான ஸ்காட் பெஸ்சென்ட், H-1B விசா கொள்கை ஒரு பெரிய மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். தற்காலிக விசா: H-1B விசா இனிமேல் நீண்டகாலமாக வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவில் வேலைக்கு வைத்திருக்க அல்ல.
இது குறிப்பிட்ட காலத்திற்கு (3-7 ஆண்டுகள்) திறமையான வெளிநாட்டு நிபுணர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்து, அமெரிக்கர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் வகையில் பயன்படுத்தப்படும்.
இந்த மாற்றம், அமெரிக்காவில் நீண்டகாலமாகக் குடியேற விரும்பும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய சவால்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்படும் H-1B விசா விண்ணப்பங்களில் 70%க்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துவந்த நிலையில், டிரம்ப்பின் இந்த விசா கொள்கை மாற்றம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
