அப்துல்லா, காமராஜ், சுரேஷ் கைது: சட்டவிரோதப் புகையிலைப் பொருட்களுக்கு எதிராகத் தஞ்சை போலீஸ் நடவடிக்கை!
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதப் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்கக் காவல்துறையினர் நடத்திய தீவிர அதிரடி வேட்டையில், இன்று ஒரே நாளில் மொத்தம் 753 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆறு பேரைக் காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
மதுக்கூர் முக்கூட்டுச் சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது, கடைக்குப் பின்புறம் இருந்த குடோனில் 136 கிலோ ஹான்ஸ் மற்றும் 41 கிலோ கூல் லீப் உட்பட மொத்தம் 177 கிலோ போதைப் பொருட்கள் மூட்டைகளாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகக் கடையை நடத்தி வந்த திருநாவுக்கரசு (63), அவரது மகன்கள் மகேந்திரன் (29), கார்த்திக் (34) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டுக்கோட்டைப் பகுதியில் வாகனத்தில் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 129 கிலோ போதைப் பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து, அப்துல்லா என்பவரை கைது செய்தனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 447 கிலோ போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, காமராஜ் மற்றும் சுரேஷ் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மூன்று தனித்தனிச் சம்பவங்களிலும், காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பால் இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தமாக 753 கிலோ போதைப் பொருட்கள் சிக்கியுள்ளன. சமூக விரோதச் செயல்களுக்கு எதிராகக் காவல்துறையின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாக உள்ளது.
