மக்கள் இயக்குநர் வி.சேகர் காலமானார்.. திரை உலகம் இரங்கல்! Popular Tamil Film Director V. Sekhar Passes Away Due to Illness

தமிழ் திரை உலகில் குடும்ப உறவுகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் எதார்த்தமான பிரச்சினைகளைக் காவியங்களாக மாற்றிய மக்கள் இயக்குநர் வி.சேகர், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 72. 

'விரலுக்கேத்த வீக்கம்', 'வரவு எட்டனா செலவு பத்தனா' போன்ற காலத்தால் அழியாத வெற்றிக் காவியங்களை வழங்கிய இந்தத் திரை ஆளுமையின் மறைவு, தமிழ்த் திரையுலக ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை நெய்வாநத்தம் கிராமத்தில் பிறந்த வி.சேகர் (பிப். 15, 1953), கல்வி மற்றும் வாசிப்புப் பழக்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இறுதித் தேர்வில் இரண்டாவது மாணவனாகத் தேர்ச்சி பெற்ற அவர், சென்னைக்கு வந்து தனது உறவினர் உதவியுடன் 19 வயதில் ஏவி.எம். ஸ்டுடியோவில் உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். வியத்தகு வகையில், அவர் தொடர்ந்து 15 ஆண்டுகள் மாநகராட்சி சுகாதாரத் துறையில் மலேரியா ஒழிப்புப் பணியாளராகப் பகுதி நேரப் பணி செய்துகொண்டே, பி.ஏ., எம்.ஏ. பட்டப்படிப்புகளைப் படித்தார்.

உலக இலக்கியங்களைத் துல்லியமாக வாசித்துத் தன்னை மேம்படுத்திக் கொண்ட வி.சேகர், மக்களுக்குத் தனது கருத்துக்களைச் சேர்க்க சினிமா மீடியத்தைத் தேர்ந்தெடுத்தார். எடிட்டர் லெனின், இயக்குநர் கே.பாக்யராஜின் ஆகியோரிடம் உதவியாளராகப் பயிற்சி பெற்ற அவர், 1990-ல் 'நீங்களும் ஹீரோதான்' மூலம் இயக்குநராகக் களமிறங்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையாததால், மீண்டும் மாநகராட்சிப் பணிக்குச் செல்ல நேர்ந்தது.

இருப்பினும், தனது கலைப்பயணத்தின் மீதான நம்பிக்கையை விடாமல், அவர் இயக்கிய 'நான் புடிச்ச மாப்பிள்ளை' திரைப்படம் அதிரடி வெற்றியைப் பதிவு செய்து, வசூல் சாதனை படைத்தது. இந்தப் படம் தெலுங்கு, இந்தி, ஒரிசா போன்ற மொழிகளில் ரீமேக் ஆகி, அப்போதைய திரை வியாபாரத்தில் வி.சேகரின் பெயரைக் கணிசமாக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, 'பொறந்த வீடா புகுந்த வீடா', 'காலம் மாறிப் போச்சு', 'வீட்டோட மாப்பிள்ளை' என அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் கூட்டுக் குடும்பங்களின் அழகையும், பெண்களின் உரிமையையும் ஆழமாகப் பேசிய வெற்றிக் காவியங்களாக அமைந்தன.

தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்த வி.சேகர், பிரபு நடித்த 'பொண்ணு பாக்கப்போறேன்' படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளதுடன், சின்னத்திரை தொடர்களையும் இயக்கியுள்ளார். 'பள்ளிக்கூடம்' படத்தில் கல்வி அதிகாரியாக நடித்து, நடிப்பிலும் முத்திரை பதித்தார். மாமா கண்ணப்பனின் மகளான தமிழ்ச்செல்வியை மணந்த அவருக்கு, மலர்க்கொடி மற்றும் 'சரவண பொய்கை' படத்தில் நடித்த மகன் காரல் மார்க்ஸ் ஆகியோர் உள்ளனர். மறைந்த மக்கள் இயக்குநருக்குத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk