இனி கிரிக்கெட் உலகம் இவரைப் பேசும்.. வைபவ் சூர்யவன்ஷியின் மின்னல் சதம்.. 42 பந்துகளில் 144 ரன்கள் குவித்து, இளம் வீரர் வரலாற்றுச் சாதனை!
சென்னை, நவம்பர் 15, 2025: இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத் தூணாகப் பார்க்கப்படும் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, துபாயில் நடைபெற்ற ஆசியா கப் ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரானப் போட்டியில், அவர் மின்னல் வேகத்தில் ஆடி 42 பந்துகளில் மிரட்டலான 144 ரன்கள் குவித்து, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அதிரடியாகக் களமிறங்கிய வைபவ், வெறும் 32 பந்துகளிலேயே சதத்தை எட்டி அசத்தினார். அவர் கிறிஸ் கெய்லின் 175 ரன்கள் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 42 பந்துகளில் 144 ரன்கள் அடித்து வெளியேறினார். இந்தப் பகீர் ஆட்டத்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடங்கும். அதாவது, அவர் குவித்த 144 ரன்களில் 134 ரன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் மூலமே வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், இதற்கு முன் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் அவர் சதமடித்திருந்தார். இதன் மூலம், இருபது ஓவர் போட்டிகளில் 35 பந்துகளுக்கும் குறைவாக இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி படைத்திருக்கிறார். அவரது ஆட்டத்தைப் பார்த்த பலரும், அவருக்குள் ஒரு வெறி இருந்ததைக் காண முடிந்தது என்று சிலாகித்துப் பேசினர்.
ஜிதேஷ் ஷர்மா தலைமையிலான இந்தியா 'ஏ' அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோரைப் பதிவு செய்தது. கேப்டன் ஜிதேஷ் ஷர்மாவும் தன் பங்குக்கு 32 பந்துகளில் 83 ரன்கள் அடித்து அசத்தினார். வைபவ்வின் ஆட்டம் குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரியங்க் பஞ்சால், "வைபவ் விளையாடியதை என்னால் நம்பவே முடியவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவர் இந்திய அணியின் சீனியர் பிரிவில் ஆடுவார். அவர் விளையாடியதை வரலாறு பேசும்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
