கிராமப்புறப் பொருளாதாரத்துக்குப் பெரும் பலம்; 10 கிலோ வரை வெள்ளி நகை அடமானம் வைக்க அனுமதி – விதிகள், கடனைத் திரும்பச் செலுத்தும் கெடு நிர்ணயம்!
இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு மற்றும் கலாச்சாரத்தில் வெள்ளியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அறிவித்துள்ளது. இனி பொதுமக்கள், தங்கத்தை அடமானம் வைப்பதைப் போலவே, தங்கள் வெள்ளி நகைகள், ஆபரணங்கள் மற்றும் நாணயங்களை வைத்து கடன் பெறலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களிலும் இந்தக் கடன் வசதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கை மாற்றம், கிராமப்புற மற்றும் சிறு வணிகர்களுக்கு நிதி அணுகலை மேம்படுத்தி, நெருக்கடியான சூழ்நிலைகளில் பணப்புழக்கத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரம்புகள் மற்றும் அடமான விதிகளின் விவரங்கள்:
ரிசர்வ் வங்கி, கடன் தொகை மற்றும் அடமானப் பொருளின் எடை ஆகிய இரண்டிற்கும் தெளிவான உச்சவரம்புகளை நிர்ணயித்துள்ளது.
ஒரு தனிநபர் அடமானம் வைக்கக்கூடிய வெள்ளி நகைகளின் மொத்த எடை 10 கிலோ வரையிலும், வெள்ளி நாணயங்களின் அதிகபட்ச எடை 500 கிராம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
₹2.5 லட்சம் வரை கடன் தொகைக்கு அதிகபட்சம் 85% வரை கடன்.₹5லட்சம் வரை கடன் தொகைக்கு அதிகபட்சம் 80% வரை கடன்.அதற்கு மேல் இருந்தால் அதிகபட்சம் 75% வரை கடன் வழங்கப்படும்.வெள்ளியின் மதிப்பு அதன் தூய்மை மற்றும் உள்மதிப்பைக் கொண்டு கணக்கிடப்படும்.
கடன் வழங்குவதற்கான குறிப்பு விலை , முந்தைய 30 நாட்களின் சராசரிச் சந்தை விலையில் குறைந்தபட்ச விலை அல்லது முந்தைய நாளின் இறுதி விலை – இதில் எது குறைவாக இருக்கிறதோ, அதன் அடிப்படையாகக் கொள்ளப்படும் என்று RBI தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், வெள்ளிக் கட்டிகள் அல்லது வெள்ளி ETF போன்ற நிதிச் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற முடியாது என்றும் RBI தெரிவித்துள்ளது.
கடன் தொகையை முழுவதையும் ஒரே தவணையில் செலுத்தும் Bullet Repayment முறைக்கு அனுமதிக்கப்படும் கடன்கள், 12 மாதங்களுக்குள் கட்டாயம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். கடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்ட பிறகு, வங்கி அல்லது நிதி நிறுவனம் 7 வேலை நாட்களுக்குள் அடமானம் வைக்கப்பட்ட வெள்ளியைத் திருப்பித் தர வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், நாள் ஒன்றுக்கு ₹5,000 அபராதம் செலுத்த நேரிடும் என்ற உறுதியான விதியும் இதில் உள்ளது.
