பாதுகாப்பாக வெளியேறிய விமானி.. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவு - பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்திய விமானப் படைக்குச் (IAF) சொந்தமான Pilatus PC-7 ரகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானம் ஒன்று, இன்று தாம்பரம் அருகே வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே விமானம் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) பாதுகாப்புப் பிரிவு மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த விபரீதத்தின் மத்தியில், விமானத்தை இயக்கிய விமானி ஒருவர், சரியான நேரத்தில் பாரசூட் மூலம் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, உடனடியாக ஒரு விசாரணைக் குழுவுக்கு (Court Of Inquiry - COI) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் PIB உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, விமான விபத்துக்கான காரணிகள் கண்டறியப்படும் என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
எனினும், கள நிலவரம் குறித்து வெளியான ஆரம்பத் தகவல்களில் சற்று முரண்பாடு காணப்பட்டது. விபத்துக்குள்ளானது சிறிய ரக விமானம் என்றும், விமானத்தில் பயணித்த இரு விமானிகளும் தப்பினர் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், விமானப் படையின் உறுதியான தகவலின்படி, விபத்துக்குள்ளானது Pilatus PC-7 பயிற்சி விமானம்தான் என்றும், அதில் விமானி ஒருவர் மட்டுமே பயணித்தார் என்றும் அவர் பாதுகாப்பாக வெளியேறினார் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பயிற்சி விமானத்தின் விபத்து, பாதுகாப்பு வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
