வான்வழி மோதல் தகவல்கள் புனையப்பட்டவை - பிரான்ஸ் கடற்படை பகிரங்க மறுப்பு! சீனா தலையீடு குறித்த செய்தியும் பொய்!
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானின் வான்வழி மோதலில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகப் பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட அவசரத் தகவலை, பிரான்ஸ் கடற்படை மிகக் கடுமையாக விமர்சித்து, அந்தச் செய்தியைப் போலியானது என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச இராஜதந்திர வட்டாரத்தில் பெரும் அமளியை ஏற்படுத்திய நிலையில், பிரான்ஸின் இந்த தீவிர மறுப்பு பாகிஸ்தானின் பிரசாரத்திற்கு ஒரு சரியான அடியாக அமைந்துள்ளது.
சமீபத்தில் நடந்த இந்தோ-பசிபிக் மாநாடு ஒன்றில் பிரான்ஸ் கடற்படை அதிகாரி ஒருவர் பேசியதாகக் கூறி, பாகிஸ்தானின் தனியார் செய்தி ஊடகம் ஒன்று ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், கடந்த மே மாதம் நடந்த வான்வழி மோதலில் பாகிஸ்தான் விமானப்படை மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாகவும், சீனத் தொழில்நுட்ப உதவியுடன் இந்திய ரஃபேல் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை அந்த அதிகாரி உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தி இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் ஊடகங்களிலும் தீயாகப் பரவியது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிரான்ஸ் கடற்படை, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உடனடியாக ஒரு செய்தி வெளியீட்டைப் பதிவிட்டது. அதில், பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் 'போலியானது மட்டுமல்லாமல் திரித்துக் கூறப்பட்டதும்' என்றும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த அதிகாரி பெயர் தவறாக 'Jacques Launay' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவரது உண்மையான பெயர் கேப்டன் Yvan Launay என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அவரது பெயரில் வெளியிடப்பட்ட கருத்துகள் அனைத்தும் புனையப்பட்டவை என்றும், அத்தகைய தகவல்களை வெளியிட அவர் ஒருபோதும் சம்மதம் அளிக்கவில்லை என்றும் பிரான்ஸ் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், கேப்டன் Yvan Launay-இன் பணி, ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை விமானத் தளத்துக்குத் தலைமையேற்பது மட்டுமே என்றும், போர் மோதல்கள் குறித்துப் பேச அவருக்கு உயர் செயல்பாட்டு அதிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் பிரான்ஸ் கடற்படை உறுதியுடன் விளக்கமளித்துள்ளது. மாநாட்டில் அவர் ரஃபேல் விமானத்தின் தொழில்நுட்பத் திறனைக் குறித்து மட்டுமே பேசியதாகவும், மோதலில் விமானங்களை இழந்தது குறித்தோ, சீனத் தலையீடு குறித்தோ அவர் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்றும் தெளிவுபடுத்தி, பாகிஸ்தானின் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
.jpg)