பெருந்தன்மையாகத்தான் இருக்கிறார் இளையராஜா: அனுமதி கேட்காததாலேயே நீதிமன்றப் படியேறுகிறார் எனக் கோயில் விழாவில் விளக்கம்!
நாட்டுப்புறப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான வேல்முருகன், ஈரோடு அருகே உள்ள ராட்டை சுற்றி பாளையத்தில் இருக்கும் சொர்ணலிங்க பைரவர் கோவிலில் நடந்த தேய்பிறை அஷ்டமி ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார். தென்னகத்தின் காலபைரவர் என்று அழைக்கப்படும் இக்கோவிலில், 39 அடி உயரமுள்ள உலகிலேயே மிக உயரமான பைரவர் சிலை உள்ளது. பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், இசையுலகின் தற்போதைய பேசுபொருளாக இருக்கும் இளையராஜா பாடல்கள் விவகாரம் குறித்துப் பகிரங்கமாகப் பேசினார்.
இசைஞானி இளையராஜா தனது பாடல்களைப் பயன்படுத்துவது தொடர்பாகத் தொடரும் நீதிமன்ற வழக்குகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, வேல்முருகன், "இளையராஜாவும் பெருந்தன்மையாகத்தான் இருக்கிறார். என்னை ஒரு வார்த்தை கேட்டுச் செய்தால் நன்றாக இருக்கும் என இளையராஜா நினைக்கிறார். அது வேறொன்றுமில்லை; பாடல்களைப் பயன்படுத்துங்கள், ஆனால் அனுமதி கேட்டுப் பயன்படுத்துங்கள். அனுமதி கேட்காத நேரத்தில் தான் நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார்," என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் அவர், பாடலுக்கான உரிமை அவரிடம் இருப்பதால்தான் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார் என்றும், உரிமை இல்லாமல் வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றமே கேள்வி கேட்கும் என்றும் சட்டரீதியான அம்சத்தை வேல்முருகன் சுட்டிக்காட்டினார். இசையமைப்பாளர் தேவா இதுகுறித்து பெருந்தன்மையுடன் பேசியதைக் குறிப்பிட்ட அவர், நான் இதைப் பற்றிப் பேசும் அளவுக்கு வளரவில்லை என்றும் விநயத்துடன் தெரிவித்தார்.
முன்னதாக, கோயில் விழாவில் பேசிய வேல்முருகன், இளைஞர்களுக்கு இறைவனின் அருளும் பணியும் இன்றைய காலகட்டத்தில் கட்டாயம் தேவை என்றும், தைப்பூசம், சஷ்டி, சிவராத்திரி, நவராத்திரி போன்ற கோயில் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கர்நாடக சங்கீதம் மட்டுமே இருந்த மேடைகளில், தற்போது நாட்டுப்புறக் கலைஞர்களுக்குப் பாடும் வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயம் என்றும், இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் திருப்தி தெரிவித்தார்.
