கூடைப்பந்து வீரன் பிகே-வின் கதை: சசிகுமார், கலையரசன் நடிப்பில் இளைஞர்களின் உணர்ச்சிமிகு 'நடு சென்டர்!
இளைஞர்களின் எனர்ஜி மற்றும் உணர்ச்சிக் கொந்தளிப்பை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமாவான 'நடு சென்டர்' வெப் சீரிஸ், வரும் நவம்பர் 20-ஆம் தேதியில் இருந்து பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ப்ரீமியர் ஆகிறது. பள்ளிப் பருவத்தின் நெகிழ்ச்சியான தருணங்கள், நட்பு மற்றும் விளையாட்டின் பவர் ஆகியவற்றை முன்னிறுத்தி வெளியாகி இருக்கும் இந்தத் தொடரின் டிரைலர், வலைத்தளங்களில் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவிலான கூடைப்பந்து ஆட்டக்காரரான 17 வயது பிகே, தனது ஒழுக்கமின்மை காரணமாக உயர்நிலைப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறான். வன்முறை மிகுந்த ஒரு மோசமான பள்ளிக்கு மாற்றப்பட்டு, அங்கு பொருந்தப் போராடும் அவனுக்கு, துணை முதல்வர் வடிவில் ஒரு திருப்புமுனை கிடைக்கிறது. தனது தலைமைத்துவப் பண்பின் மூலம் கட்டுப்பாடற்ற மாணவர்களைக் கொண்டு கூடைப்பந்து அணியை உருவாக்கி, பள்ளியின் இழந்த பெருமையை மீட்கும் சவாலான பயணமே இந்தத் தொடரின் முக்கியக் கதைக்களம் ஆகும்.
இளைஞர்களின் எழுச்சிக் கதையான இதில் சூர்யா எஸ் கே, சூர்யா விஜய் சேதுபதி, சாரா பிளாக் உள்ளிட்டோர் புதுமுகங்களாகக் களமிறங்கி நடித்துள்ளனர். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த நடிகர்களான ஆஷா ஷரத், கலையரசன் மற்றும் முதன்மைக் கதாபாத்திரத்தில் பயிற்சியாளராக ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் எம். சசிகுமார் ஆகியோரின் பங்காளிப்பு தொடருக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. ஹெஸ்டின் ஒளிப்பதிவு, விஷால் சந்திரசேகர் இசை எனத் தொழில்நுட்பக் குழுவும் இந்தத் தொடருக்கு உறுதுணையாக உள்ளது.
இந்தத் தொடர் குறித்து இயக்குநர் நரு நாராயணன் பகிர்ந்து கொண்டதாவது, "இது வெறும் உயர்நிலைப் பள்ளியின் கூடைப்பந்து அணியைச் சுற்றி நகரும் கதை அல்ல; அதைத் தாண்டிய வாழ்க்கை முறையைப் பேசுகிறது. வாழ்வில் எதாவது ஒரு வடிவத்தில் ஒரு நாள் நிச்சயம் பேஸ்கட்பால் உனக்கு உதவும் என என் பயிற்சியாளர் சொன்ன வார்த்தையைத்தான், இந்தப் படத்தின் மூலம் சசிகுமார் கதாபாத்திரம் மூலம் பதிவு செய்திருக்கிறோம். விறுவிறுப்பான கதை சொல்லலுடன் கூடிய இந்தத் தொடர் அனைத்துத் தரப்பினரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
