24 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன தொழில்நுட்பத்தில் வெளியீடு; நேசமணி கதாபாத்திரம் இன்று வரை ட்ரெண்ட் எனப் புகழாரம்!
நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்து 2001-ல் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி அட்மாஸ் ஒலியுடன் வரும் 21-ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் வினோத் ஜெயின் வெளியிடும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் சரவணன் (விஜய் சார்பில்) மற்றும் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் ஆர். ஏ. ராஜா (சூர்யா சார்பில்) உட்படப் பல இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் வினோத் ஜெயின் மற்றும் ஷானு, படத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு 70 நாட்களுக்கும் மேலாக உழைத்ததாகக் குறிப்பிட்டனர். இப்படத்தின் ஒலி அமைப்பை 5.1, 7.1, மற்றும் டால்பி அட்மாஸ் என மூன்று வெவ்வேறு வெர்ஷன்களில் மாற்றி அமைத்ததுடன், ஒவ்வொரு ஃபிரேமும் DI செய்யப்பட்டு கலர் கரெக்ஷனும் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் மீண்டும் ஒரு தரமான திரையரங்க அனுபவத்தைப் பெறுவதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திரைப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இயக்குநர்கள் கௌதம் ராஜ் மற்றும் பேரரசு ஆகியோர் 'ப்ரண்ட்ஸ்' ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படம் என்று புகழாரம் சூட்டினர். விஜய்யை 'கலெக்ஷன் கிங்' ஆக உயர்த்தியதிலும், சூர்யாவை ஊர் முழுவதும் அறிமுகப்படுத்தியதிலும் இந்தப் படத்திற்குப் பெரும் பங்கு உண்டு எனவும் சுட்டிக்காட்டினர். காமெடிப் படத்தை இயக்குவதுதான் மிகவும் கடினம் என்றவர்கள், வடிவேலுவின் 'நேசமணி' கதாபாத்திரம் இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ட்ரெண்டாக இருப்பதை நினைவு கூர்ந்தனர். மேலும், அன்றாடச் செய்திகளால் மன அழுத்தத்தில் இருக்கும் மக்களுக்கு இந்தத் திரைப்படம் ஒரு பெரிய ஆறுதலாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
நடிகர் ரமேஷ் கண்ணா பேசியபோது, பல சுவாரஸ்யமான ரகசியங்களை வெளிப்படுத்தினார். படப்பிடிப்பின் போது சூர்யா மற்றும் ஜோதிகா காதலித்ததாகவும், தான் அவர்களுக்குத் தூதுவராகப் பணியாற்றியதாகவும் கலகலப்பாகத் தெரிவித்தார். மேலும், இயக்குநர் சித்திக் அவர் எழுதிய வசனங்களைத் தவிர வேறு எதையும் நடிகர்களைப் பேச அனுமதிக்க மாட்டார் என்றும், விஜய் படப்பிடிப்புத் தளத்தில் அமைதியாக இருந்தாலும் நடிக்கும் போதும், டப்பிங் பேசும்போதும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல முதல் முறையிலேயே கச்சிதமாகப் பேசிவிடுவார் என்றும் பாராட்டிப் பேசினார்.
