₹500 முதல் ₹5,000 அபராதம்: திறந்தவெளியில் குப்பை கொட்டும் வணிக நிறுவனங்களுக்கு கோவை மாநகராட்சி எச்சரிக்கை!
கோவை மாநகரப் பகுதியில் தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், பொது இடங்களிலும், திறந்தவெளிகளிலும் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்டறிந்து, அவர்கள் மீது அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம்/ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குப்பையைச் சாலையில் வீசுவோருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் யார், எந்தப் பகுதியிலிருந்து வருகின்றனர், அங்கே தூய்மைப் பணியாளர்கள் செல்கிறார்களா போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. பணியாளர்கள் சென்ற பின்னரும் குப்பையைச் சாலையில் வந்து போடுவதற்கான காரணங்களும் கண்டறியப்படுகின்றன.
இந்த ஆய்வின் மூலம் அடையாளம் காணப்பட்டவர்களுக்கு, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலமாக முதலில் அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அதே தவறைச் செய்யும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படுகிறது. வ.உ.சி. மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தைச் சுற்றி உள்ள வணிக வளாகக் கடைகள் சிலவற்றில், இரவில் குப்பையை ஓரிடத்தில் சேகரித்து வைக்காமல், வெளியே சிதறிக் கிடப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நிறுவனங்களுக்கு மாநகராட்சி வழங்கிய நோட்டீஸில், "உங்கள் வணிக நிறுவனத்தின் முன் இரவு நேரங்களில் குப்பையைப் பெருக்கி வெளியே சிதறிக் கிடப்பதற்குக் புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரம் இருக்கிறது. அவற்றை அகற்றி, ஒரு பையில் சேகரித்து உங்கள் வளாகத்தின் முன் ஓரத்தில் வைக்க வேண்டும்" என்று உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும், முதல் முறை மீறினால் ₹500, இரண்டாவது முறை மீறினால் ₹1,500, மூன்றாவது முறை மீறினால் ₹5,000 வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
