ரம்யாவின் குடும்பத்திற்கு ₹3 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!
மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவி ரம்யாவின் குடும்பத்துக்கு, ₹3 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தத் தவறிய கல்லூரி நிர்வாகத்தின் செயல், மனித உரிமை மீறல் என ஆணையம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணவி ரம்யா, அங்குள்ள ஞானாம்பிகை மகளிர் அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், 2015-இல் செமஸ்டர் தேர்வு முடிந்து மாடியில் உணவருந்தச் சென்றுள்ளார். அப்போது, மாடியில் மாணவர்கள் இருப்பது அறியாத கல்லூரி பாதுகாவலர் அனைத்துக் கதவுகளையும் பூட்டிச் சென்றுள்ளார். இதனால், பயந்துபோன ரம்யாவும் அவரது தோழியும், துப்பட்டா மூலம் இரண்டாம் மாடியில் இருந்து கீழே இறங்க முயற்சித்துள்ளனர். எதிர்பாராதவிதமாக, நிலை தடுமாறி ரம்யா கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து துறைரீதியான விசாரணை நடத்தப்படவில்லை என்றும், உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கல்லூரி கல்வி இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதை தீவிரமாகக் கருதிய மனித உரிமை ஆணையம், உரிய விசாரணை மேற்கொள்ளாதது, பெற்றோருக்கு 10 ஆண்டுகளாக இழப்பீடு வழங்காதது ஆகியவை மனித உரிமை மீறலே என்று பிரகடனம் செய்தது. இதையடுத்து, மாணவி ரம்யாவின் குடும்பத்துக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீட்டை ஒரு மாத காலத்துக்குள் வழங்கும்படி தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
