கோவை கல்லூரி மாணவி வழக்கு – பிரதானக் குற்றவாளி சிறைக்கு மாற்றம்.. ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை..போலீஸ் அதிரடி நடவடிக்கை!
கோவையில் கடந்த மாதம் 2ஆம் தேதி இரவு கல்லூரி மாணவியின் காதலனை அரிவாளால் வெட்டி விட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர வழக்கில், காவல்துறையினரால் சுட்டுப் பிடிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த பிரதானக் குற்றவாளிகளில் ஒருவரான குணா என்ற தவசி, குணமடைந்துள்ளதைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 13) கோவை மத்திய சிறையில் பலத்தப் பாதுகாப்புடன் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டபடி, குற்றப்பத்திரிகையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
இச்சம்பவம் நடந்த மறுநாள், அதாவது 3ஆம் தேதி இரவு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி, காளி என்கின்ற காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த குணா என்கின்ற தவசி ஆகிய மூன்று வாலிபர்களும் துடியலூரில் பதுங்கியிருந்தபோது, தனிப்படை போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டனர். இதில் அவர்கள் மூவரின் கால்களிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் மூவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குண்டுகள் அகற்றப்பட்டு, அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் காவல்துறைப் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சையின் பலனாக, துப்பாக்கிச் சூட்டில் ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்திருந்த மதுரைைச் சேர்ந்த குணா என்ற தவசி தற்போது முழுமையாகக் குணமடைந்து விட்டார். அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்யக் கூறியதை அடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார். நீதிபதி உத்தரவின்படி வரும் 19ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட உள்ள குணா என்ற தவசி, பலத்தக் காவல்துறைப் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
தற்போது பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார் மற்றும் கூடுதல் விசாரணை ஆய்வாளர் லதா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குற்றவாளிகளைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது மற்றும் நீதிபதி முன்னிலையில் மாணவி முன்பு அடையாள அணிவகுப்பு நடத்துவது போன்ற முக்கிய நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட உள்ளனர். மற்ற குற்றவாளிகளான காளி என்ற காளீஸ்வரன் மற்றும் சதீஷ் என்ற கருப்புசாமி ஆகிய இருவரும் குணமடைந்த பிறகு, அவர்களுக்கான அடையாள அணிவகுப்பும் விரைவில் கோவை மத்திய சிறையிலேயே நடைபெறும் என்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
