வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஓராண்டாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த நிலையில் சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக" மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இன்று பகீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த வன்முறைப் போராட்டத்தில் இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து வெளியேறி ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாபெரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தச் சூழலில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஷேக் ஹசீனா உத்தரவிட்டார் எனக் கூறப்படும் ஒரு ஆடியோ ஆதாரம் வெளியானது. இந்த ஆடியோவை முக்கிய ஆதாரமாகக் கொண்டு, ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் காவல் ஐஜி ஆகியோர் மீது தீர்ப்பாயம் புதிய வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
கொலை, கொலை முயற்சி, சித்திரவதை, மனிதாபிமானமற்ற செயல்கள், நிராயுதபாணிப் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது, மாணவர்களைக் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு கடும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த போராட்டத்துக்கு ஷேக் ஹசீனாதான் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இது அரசியல் உள்நோக்கத்துடன் பழி போடும் செயல் என ஹசீனா தரப்பு உறுதியாக மறுத்தது.
இந்த உச்சக்கட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிராகக் குற்றம் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியது. அத்துடன், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பால், வங்கதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
