உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு: கல்லூரி நிர்வாகம், ஒப்பந்ததாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு!
கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி விடுதி சமையல் கூடத்தில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகவும், மாணவர்களுக்குச் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் தொடர்ந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று அங்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
தடாகம் சாலையில் அமைந்துள்ள இந்தக் கல்லூரியில், கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் விடுதிகளில் தங்கிப் பயில்கின்றனர். 'சமூக நீதி விடுதிகள்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மாணவர்களுக்குச் சிறப்பான வசதிகளையும் உணவையும் அளிக்க அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தக் கல்லூரியில் நிலையற்ற நிர்வாகச் சீர்கேடு வெளிப்பட்டுள்ளது.
சமையல் கூடம் முறையாகப் பராமரிக்கப்படாதது குறித்தும், உணவு சுகாதாரமற்ற நிலையில் தயாரிக்கப்படுவது குறித்தும் தொடர்ந்து புகார்கள் வந்ததால், உணவுப் பாதுகாப்புத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில், அங்கு சமைக்கப்படும் உணவு சரியாக வேகாமலும், கடந்த மாதம் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாகவும், கடந்த வாரம் தக்காளி சாதம் கொடுத்தபோது அதில் பூச்சிகள் இருந்ததாகவும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
மாணவர்களின் புகார்களைத் தொடர்ந்து, இந்தச் சுகாதாரக் குறைபாடு குறித்து உடனடி விளக்கம் கேட்டு, கல்லூரி நிர்வாகத்திற்கும், உணவு தயாரிக்கும் ஒப்பந்ததாரருக்கும் நோட்டீஸ் அனுப்ப உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் பெற்றோர் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
