காவல்துறை விசாரணை: கானா பாடல் பின்னணியில் வெளியாகி 3.6 லட்சம் பார்வைகளைக் கடந்த வீடியோ.. சைபர் கிரைம் போலீஸ் விசாரணை!
நீதிமன்றக் கூண்டில் நின்றபடியே வீடியோ எடுத்து அதனை கானா பாடல் பின்னணி இசையுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்சாகப் பகிர்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றப் பகுதிகளில் வீடியோ எடுப்பது கடுமையாகத் தடை செய்யப்பட்ட நிலையில், இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் குற்றச் செயலில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பரத் என்பவர், Mr.super smoker boy என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் இந்தக் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். நீதிமன்றத்தின் குற்றவாளி கூண்டில் அவர் நின்றிருக்க, நீதிமன்றத்திற்கு உள்ளே இருந்த மற்றொரு நபர் செல்போனில் இந்தக் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் ரீல்சாக வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது 3.62 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வெளியிடுவது Contempt of Court உட்பட பல சட்டப் பிரிவுகளுக்கு உட்பட்ட குற்றமாகும். இந்தச் செயலில் ஈடுபட்ட நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
